காங்கிரஸ், அதிமுக அமளி: நாடாளுமன்றம் 5-ஆவது நாளாக ஒத்திவைப்பு

ரஃபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸும், மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவும்,
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள்.


ரஃபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸும், மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசமும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை ஐந்தாவது நாளாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 
மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், அவை மீண்டும் கூடிய போது, கடும் அமளிக்கு இடையே தேசிய டிஸைன் நிறுவனம் சட்டத் திருத்த மசோதா 2018 தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்களும், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜேபிசி அமைக்கப்பட்டு, கோப்புகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  ஜேபிசி தவிர்த்து, அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார். அப்போது, உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி சுமித்ரா மகாஜன் பலமுறை கேட்டுக் கொண்டும், அமளி தொடர்ந்ததால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 
மாநிலங்களவையில்..: மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியது. அப்போது, சில மாநிலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு , விலை உயர்வு பிரச்னை, வேளாண் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்திருப்பது விவாதத்திற்கு ஏற்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் ஆர்.கே. சிங், கே.ஜே. அல்போன்ஸ், பி. ராதாகிருஷ்ணன், அஷ்வினி குமார் சௌபே, ஜே.பி. நட்டா ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
அவையில் பூஜ்ய நேரம் தொடங்கியதும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தை அதிமுக, திமுக உறுப்பினர்கள் எழுப்பிஅவையின் மையப் பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். ரஃபேல் விவகாரத்தை காங்கிரஸாரும், ஆந்திர மாநில விவகாரத்தை அம்மாநில உறுப்பினர்களும் எழுப்பினர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மூலம் அளிக்கப்பட்டுள்ள உரிமை மீறல் நோட்டீஸ் ஏற்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும். ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும் அரசு தவறாக வழி நடத்தியுள்ளது. இதனால், இந்த அரசு தொடர்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்றார்.
அப்போது, உரிமை மீறல் நோட்டீஸ் மீது முடிவு எடுக்க அவைத் தலைவரை அனுமதிக்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், ரஃபேல் விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ரஃபேல் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதாலும், சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் தில்லி உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதாலும் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார். அமளியால் அவை பிற்பகல் 2 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com