நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: புதுச்சேரியில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம்: என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக புறக்கணிக்க முடிவு

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க முதல்வர் நாராயணசாமி அழைப்பின் பேரில் புதன்கிழமை (டிச.19)

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க முதல்வர் நாராயணசாமி அழைப்பின் பேரில் புதன்கிழமை (டிச.19) அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்தன.
புதுவையில் மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்ஏ.க்களின் நியமனம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. மேலும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பேரவையில் வாக்குரிமை உண்டு எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக பெரும்பான்மை பெறும் கட்சியை பின்னுக்குத் தள்ளி மத்திய அரசு நினைக்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்த ஏதுவாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும், ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுவை அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.
இந்தக் கோரிக்கைகளை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவித்ததுடன், அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையை கேட்கவும் முடிவு செய்தார். அதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் எனக் கூறி இருந்தார்.
முதல்வரின் இந்த அழைப்பை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் நிராகரித்ததுடன் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அறிவித்துள்ளன.
இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கூறும்போது, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பணி. அதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்? எனவே, இந்தக் கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்றார் ரங்கசாமி. 
அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கூறும்போது, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுவை அரசு அல்லது பேரவைத் தலைவர் சார்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். தனிநபர்கள் வழக்குத் தொடுத்ததால் வழக்கில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்காத நிலையில், தீர்ப்பு புதுவைக்கு பாதகமாக வந்துவிட்டது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு குடியரசுத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு ஆகியவற்றில் வாக்குரிமை இல்லாத நிலையில், பேரவைக்குள் எப்படி வாக்குரிமை வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை. எனவே, தற்போதுகூட பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், உச்ச நீதிமன்றத்தை அணுகி உரிய விளக்கம் கேட்டுப் பெறலாம். முதல்வர் நாராயணசாமி தனக்கு பாதகமான நிலை வரும்போது மட்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டுவார். அரசியல் லாபத்தை கணக்குப் போட்டு கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் என்றார் அன்பழகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com