தீபத் திருவிழா: கோயிலுக்குள் செல்லிடப்பேசிக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்லிடப்பேசியை எடுத்து வரத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்லிடப்பேசியை எடுத்து வரத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பான ஆய்வுப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
 எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் ஆகியோர் கோயிலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
 கோயில் மூன்றாம் பிரகாரத்தில் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது? பக்தர்களை எந்தெந்த வழியாக அனுமதிப்பது? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கோயில் பெரிய நந்தி, ராஜகோபுரம் வழியாக வந்து ஆய்வு செய்த அதிகாரிகள், தேர்களின் மீது ஏறிப் பார்த்து ஆய்வு செய்தனர்.
 ஆய்வுக்குப் பின்னர், அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் ஏற்றப்படும் பரணி தீபம், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தின் போது கோயில் வளாகத்தில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சி, அருணாசலேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கும் நிகழ்வுகளைக் காண வரும் பக்தர்கள் செல்லிடப்பேசியை எடுத்து வரத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
 தடையை மீறி செல்லிடப்பேசிகளை எடுத்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 இந்த ஆய்வின்போது, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com