தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் நிவாரண பணிகளை காரணம்காட்டி 20 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என
தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

புதுதில்லி: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் நிவாரண பணிகளை காரணம்காட்டி 20 தொகுதிகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டால், இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருவாரூர், திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம், இரு தொகுதிகளுக்கும் நடக்கவிருந்த இடைத்தேர்தலை, பருவமழையை காரணம் காட்டி தள்ளிவைத்தது. 

இதனிடையே டிடிவி ஆதரவாளர்களான அதிமுக உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் 20 பேரவைத் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி அதிகாலை கஜா புயலால் தமிழகத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட12 மாவட்டங்களை கடுமையாக தாக்கியது. 

பேரழிவு ஏற்பட்டுள்ள தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை சில நாள்களை கடந்தும் பல கிராமங்களில் மக்கள் குடிநீர், மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

இந்நிலையில், தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்படும். இதுவரை அப்படியொரு கோரிக்கையை தமிழக அரசு வைக்கவில்லை. 

மேலும், எப்போது தேர்தல் தேதி குறித்து ஆலோசித்தாலும், திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை கணக் கிட்டே முடிவு செய்வோம். தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், புயல் பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக அவர்களும் கூறுகிறார்கள். தமிழக அரசிடம் கருத்து கேட்ட பின்னரே தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக வருந்துகிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். மக்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது மக்கள் துன்பங்கள் எல்லாம் மறந்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com