துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல்: ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அல்ல!: ஆளுநர் மாளிகை விளக்கம்

துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக தெரிவித்த கருத்துகள் ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அல்ல என்று ஆளுநர் மாளிகை


துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியதாக தெரிவித்த கருத்துகள் ஆளுநரின் சொந்தக் கருத்துகள் அல்ல என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்கம்:
கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக கடந்த 6-ஆம் தேதியன்று நடந்த பயிலரங்கில் உரையாற்றும்போது துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்ததாக பல்வேறுவிதமான செய்திகள் வருகின்றன.
ஆனால், பயிலரங்க மேடையில் தெரிவித்த கருத்து என்னவெனில், துணைவேந்தர்கள் நியமனத்தில் கடந்த காலங்களில் பல கோடி ரூபாய் கை மாறியதாக கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்துதான் அறிந்தேன். இதனை நம்பவே முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது. 
எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டுமென நான் தீர்மானமாக முடிவு செய்தேன். அதன் அடிப்படையில், இதுவரையில் 9 துணைவேந்தர்களை அவர்களது தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்துள்ளேன் என்று ஆளுநர் பேசினார்.
இந்தப் பேச்சின் மூலம், ஊழல் அல்லது பணப் பரிமாற்றம் குறித்து ஆளுநர் யார் மீது எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை என்பது தெளிவாகிறது. சில கல்வியாளர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரைச் சந்திக்கும்போது கருத்துகளைத் தெரிவித்தனர். அந்தக் கருத்துகளை மட்டுமே ஆளுநர் வெளிப்படுத்தினார்.
கடந்த ஆண்டுகளில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு முன்பாக நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை தமிழக மக்கள் அறிந்திருக்கிறார்கள். 
ஒரு துணைவேந்தரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் கைது செய்திருக்கிறது. இரண்டு துணைவேந்தர்களின் வீடுகள், அலுவலகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிப்படைத்தன்மை- நேர்மை: இதுபோன்ற சூழ்நிலைகளில், துணைவேந்தர்கள் நியமனத்தில் உள்ள அம்சங்களில் இப்போதைய ஆளுநர் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும், துணைவேந்தர் நியமனங்களில் நேர்மை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட அம்சங்களைப் பின்பற்றி வருகிறார். இதுவரை 9 துணைவேந்தர்கள் இப்போதைய ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தகுதி, திறமை போன்றவற்றின் மூலமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
இந்த நியமனங்கள் தமிழகத்தில் உயர் கல்வியின் தரத்தை நிச்சயமாக உயர்த்திட உதவி செய்திடும். இதன்மூலம், உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பிரகாசம் அடையும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com