நிலக்கரி வாங்குவதில் முறைகேடு இல்லை: மின் வாரியம் விளக்கம்

நிலக்கரி வாங்குவதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. தனியாரிடம் நிலக்கரி வாங்குவதால் ரூ.5.56 கோடி செலவு குறைகிறது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

நிலக்கரி வாங்குவதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. தனியாரிடம் நிலக்கரி வாங்குவதால் ரூ.5.56 கோடி செலவு குறைகிறது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியைவிட இந்திய நிலக்கரியில் குறைந்த கலோரி வெப்பம், அதிக சாம்பல், குறைந்த ஈரப்பதம் இருக்கும். எனவே குறைந்த தரம் உள்ள நிலக்கரியுடன், உயர்ந்த தரம் உடைய நிலக்கரியை ஒப்பிட முடியாது. அதே வகையில் தான் அதற்கான விலையையும் ஒப்பிட வேண்டும்.
 இந்திய நிலக்கரி விலை டன் ரூ.3,655: இந்திய நிலக்கரி ஒரு டன் ரூ.2,000 என்பது இந்திய சுரங்கங்களில் இருந்து வாங்கும் விலையாகும். அதன்பின் அதை ரயில் மூலம் அருகில் உள்ள துறைமுகத்துக்குக் கொண்டு சென்று கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்க்க ஒரு டன்னுக்கு கூடுதலாக ரூ.1,655 செலவாகிறது. எனவே இந்திய நிலக்கரி விலை ஒரு டன் ரூ. 3,655 ஆகும்.
 இறக்குமதி நிலக்கரி ரூ.505 குறைவு: இந்திய நிலக்கரி தரத்துக்கு இணையாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி விலை ஒரு டன் ரூ.3,150 தான். ஆக ஒரு டன்னுக்கு ரூ.505 குறைவாக கிடைக்கிறது. இந்த கணக்குப்படி தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி மூலம் ரூ.33 கோடி நஷ்டம் ஏற்படுவதாக செய்தி வெளியாகியிருப்பதில் உண்மையில்லை. மாறாக ரூ.5.56 கோடி மிச்சமாகிறது.
 தமிழக அரசின் ஆலோசனைக்குப் பிறகு கனமழை, ஒடிஸா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி ஏற்றும் துறைமுகங்களில் புயல் பாதிப்பு, அனல் மின்நிலையங்களில் குறைவான நிலக்கரி இருப்பு, 3 தனியார் நிறுவனங்கள் விதித்த விலை ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு நிலக்கரி இறக்குமதி செய்ய ஒரு முறை மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் நிலக்கரி விலை சர்வதேச நிலக்கரி விலையைவிட ரூ. 76 லட்சம் குறைவாக உள்ளது.
 இறக்குமதி அவசியமாகிறது: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்துக்கு ஆண்டுக்கு 2 கோடியே 45 லட்சம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்திய நிலக்கரி விநியோகம் சராசரியாக ஒரு கோடியே 50 லட்சம் டன் அளவுக்கே உள்ளது. எனவே நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதிதான் செய்ய வேண்டும்.
 தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அண்மையில் 17.5 லட்சம் டன் நிலக்கரியை இ- டெண்டர் வழியாக நாட்டிலேயே மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள இறக்குமதி சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் ரூ. 139 கோடி மிச்சப்படுத்தப்படுகிறது. இதுபோல அரசு வழங்கியுள்ள அரசாணை மூலம் அவசரத்துக்காகத் தனியார் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி நிலக்கரி வாங்குவது 1.10 லட்சம் டன் தான்.
 நமது மொத்த தேவையில் 0.45 சதவீதமான இது 2 நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. இது அவசரத் தேவைக்காக மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com