நீர்நிலை புறம்போக்குகளில் புதிதாக ஆக்கிரமிப்புகள் கூடாது: வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

நீர்நிலை, புறம்போக்குகளில் புதிதாக ஆக்கிரமிப்புகள் எதையும் அனுமதிக்கக் கூடாது என்று வருவாய் அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்நிலை, புறம்போக்குகளில் புதிதாக ஆக்கிரமிப்புகள் எதையும் அனுமதிக்கக் கூடாது என்று வருவாய் அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கூவம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆட்சேபகரமான நிலங்களில் வசித்தோருக்கு மாற்று இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வருவாய் அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன் விவரம்:-
எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சான்றிதழ்கள் வழங்குவதற்கு முன்பாக அது குறித்த விண்ணப்பத்தினை தீர விசாரித்த பிறகே அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேராத சிலர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனக் கூறி சான்றிதழ்கள் பெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விழிப்புப்பணி ஆணையரக விசாரணைக்கும், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சிலர் ஜாதி சான்றிதழைத் திருடி அதில் தாலுகா அலுவலகத்தின் போலியான முத்திரைகளை இட்டுள்ளதாகவும் புகார்கள் பெறப்படுகின்றன. எனவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களை வழங்கும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
புறம்போக்கு நிலங்கள்: நீர் நிலை புறம்போக்குகளில் புதிதாக எந்த ஆக்கிரமிப்புகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆக்கிரமிப்புகள் ஏற்படுமேயானால் அதனைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து அகற்ற வேண்டும். அரசியல்வாதிகள் போன்ற நபர்களின் குறுக்கீடுகள் ஏதேனும் இருந்தால் அதுகுறித்துத் தெரிவிக்கலாம். உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழு அனுப்பி வைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
போலி ஆவணங்கள்-மிகப் பெரிய குற்றம்: சாதாரண, சாமானிய பொது மக்களின் துயர நிலையைப் பயன்படுத்தி போலியான வருவாய் ஆவணங்களைத் தயாரித்து அளிப்பது மிகப் பெரிய குற்றமாகும். இது போன்ற சம்பவங்கள் மிகமிக கடுமையான வகையில் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com