சினிமாவில் இனி நடிப்பது கட்சி செலவுக்காக மட்டும்தான்

சினிமாவில் இனி நான் நடிப்பது கட்சி நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலைத் தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக் கூடாது
சினிமாவில் இனி நடிப்பது கட்சி செலவுக்காக மட்டும்தான்

சினிமாவில் இனி நான் நடிப்பது கட்சி நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலைத் தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக் கூடாது, இருக்காது என்று வேலூரில் நடைபெற்ற கல்லூரி விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
 வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி.) மருத்துவ மாணவர்கள் கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 விழாவைத் தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:
 மருத்துவர்களின் பெருமை, பெயர் இல்லாவிடினும் பல நூறு ஆண்டுகள் வாழும். சி.எம்.சி.யை உருவாக்கிய ஐடா ஸ்கடர் பெயர், முகம் மறந்துபோகலாம். ஆனால் அவர் விட்டுச் சென்ற கல்வி எனும் மலர்களில் கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.
 எனக்கு நல்ல தமிழகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும், தாகமும் இருக்கிறது. அது எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் இருக்கிறது. நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும்.
 நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிற அரசு அல்ல. அன்பான அரசு நூறு ஆண்டுகள்கூட இருக்கும். மருந்து, மாத்திரைகளைத் தாண்டி ஏழைகளை நோக்கி மருத்துவம் நீள இருக்கிறது. மனிதநேயம் மருத்துவர்கள் மூலம் இன்னும் வாழும்.
 நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன்.
 தமிழகத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம். நமக்கு எதுக்கு, இது எல்லாம், ஏன் என்று யோசித்தேன். என் சலவை சட்டை கசங்கிவிடுமோ என்றுகூட பயந்தேன். இனி பயப்பட மாட்டேன். ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை.
 நாங்கள் மற்றவர்களுக்காக அழுபவர்கள். மீதம் இருக்கும் என் நாள்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான். இனி நான் சினிமாவில் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலைத் தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக் கூடாது. இருக்காது.
 கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்பார்கள். கட்சி அரசியல் தான் பேசக் கூடாது. மக்கள் அரசியல் பேசலாம்.
 மாணவர்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து விடக்கூடாது. ஒதுங்கக்கூடாது. மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com