பேராசிரியர் கல்வித் தகுதி அங்கீகாரம்: அக்டோபரில் சிறப்பு ஏற்பாடு: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

இணைப்புக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கல்வித் தகுதி அங்கீகாரம் அளிக்க, வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிறப்பு ஏற்பாட்டை சென்னைப் பல்கலைக்கழகம் செய்துள்ளது.


இணைப்புக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கல்வித் தகுதி அங்கீகாரம் அளிக்க, வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிறப்பு ஏற்பாட்டை சென்னைப் பல்கலைக்கழகம் செய்துள்ளது.
கல்லூரிகளில் ஆசிரியர் பணியில் சேருபவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் கல்வித் தகுதி அங்கீகாரம் பெறுவது கட்டாயம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், புதிதாக பணியில் சேர்க்கப்படும் பேராசிரியர்களுக்கு கல்லூரிகள் கல்வித் தகுதி அங்கீகாரம் பெற வேண்டும்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் அடிப்படையில், கல்லூரி ஆசிரியர் கல்வித் தகுதி தொடர்பான யுஜிசி-யின் (பல்கலைக்கழக மானியக் குழு) புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழகங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்தப் புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருபவர்கள் முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் (தேசிய தகுதித் தேர்வு) அல்லது செட் (மாநில அளவிலான தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சி (பிஎச்.டி) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதை, சென்னைப் பல்கலைக்கழகமும் இப்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பேராசிரியர்கள் கல்வித் தகுதி அங்கீகாரம் வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது: பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே உரிய தகுதியுடன் இருக்கின்றனர். மீதமுள்ள 30 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக உள்ளனர். இந்த இடங்களில் தகுதியுள்ள பேராசிரியர்களை நியமிக்க கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கல்லூரிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பேராசிரியர்களுக்கு கல்வித் தகுதி அங்கீகாரம் வழங்குவதற்கான சிறப்பு முகாமை வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில், ஒவ்வொரு பாடத்துக்கும் நியமிக்கப்படும் குழுக்கள் நேரடியாக கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கீகாரம் வழங்குவார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com