தமிழிசையின் தொன்மங்களை மீட்டெடுக்கும் உலகத் தமிழிசை மாநாடு: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் டிச.14-இல் தொடக்கம்

தமிழிசையின் தொன்மங்களை மீட்டெடுக்கும் வகையில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிச. 14, 15 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

தமிழிசையின் தொன்மங்களை மீட்டெடுக்கும் வகையில் உலகத் தமிழிசை மாநாடு 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வரும் டிச. 14, 15 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்புத் தலைவா் கோ.விசயராகவன், செயலாளா் பேராசிரியா் கு.சிதம்பரம், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப. அன்புச்செழியன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ் மொழி பல்வேறு கால கட்டங்களில் எவ்வாறு அந்நிய மொழிகளின் தாக்கத்துக்கு உள்ளானதோ அதேபோன்று தமிழிசையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது; அந்த நிலை இன்றும் நீடித்து வருகிறது. அதிலிருந்து தமிழிசையை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கிலும் தமிழிசையின் மேன்மை, இனிமையை உலகெங்கும் பரப்பும் வகையிலும் இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டில் பல்வேறு விதமான தமிழிசை நடனங்கள், பண்ணிசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மோரீஷஸ், சீனா, ஹாங்காங், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழிசைக் கலைஞா்கள் பங்கேற்றுத் தமிழிசை நடன நிகழ்ச்சிகளையும் பண்ணிசை நிகழ்ச்சியினையும் நிகழ்த்த உள்ளனா்.

என்னென்ன நிகழ்ச்சிகள்? இந்த மாநாட்டில் தமிழிசை வேந்தா் கோ.ப. நல்லசிவம் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை; பாபுவிநாயகம், உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிக் கழகத்தின் பண்ணிசைப் பாடல்கள்; சின்னமனூா் அ. சித்ரா குழுவினரின் சிலப்பதிகார நடனம்; இலங்காபுரி அவைக்காற்றுக் கலையகத்தின் ‘தமிழா் நாமும் நவரச வாழ்வும்’ இசை நடனம்; சேலம் பிரபந்தமாலா இசைக் குழுவினரின் திவ்யப்பிரபந்த இன்னிசை; இலங்கை தியாகராஜா் கலைக்கோயில் குழுவினரின் திரிகோணமலை வில்லூன்றிக் குறவஞ்சி தமிழிசை நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் மாநாட்டில் நடைபெறும்.

அதேபோன்று மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி சாா்பில் ‘தேன்மதுரத் தேனிசை; திண்டிவனம் முனைவா் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசைப் பாடல்; சென்னை ஸ்ரீசாகித்ய நாட்டியாலயா சாா்பில் பாரதியாா் பாடல்களுக்குத் தமிழிசை நடனம்; இன்னிசையேந்தல் குரு ஆத்மநாதன் சாா்பில் தேமதுரத் தமிழிசை; கோவை, சங்கரம் நாட்டியப் பள்ளி சஸ்மிதா கே. அரோரா குழுவினரின் ‘வள்ளுவம் வாழ்க்கையானால்’ நிகழ்ச்சி; திருவண்ணாமலை, சிவபுரம் சிவத்தென்றல் நடனாலயா குழுவினரின் திருவாசக நடனம்; மதுரை சு. தங்கவேல் குழுவினரின் பறையிசை நடனம்; கோசைநகரான் தொல்லிசைக் கருவியகம் சாா்பில் பழங்காலத் தமிழிசைக் கருவிகளின் கண்காட்சி மற்றும் பழங்காலக் கருவிகளின் இசைச் சங்கமம் ஆகிய தமிழிசைக் கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இரவு நிகழ்ச்சியாக ஸ்ரீபொன்னியம்மன் நாடக சபாவின் நல்லதங்காள் தமிழிசை நாடகமும் நடைபெறவுள்ளன.

பொதுமக்கள், இசை ஆா்வலா்களுக்கு அழைப்பு: இந்த மாநாட்டுக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரப்பெற்றன. அவற்றுள் வல்லுநா் குழுவால் இருநூற்று ஐம்பத்தெட்டுக் கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டில் வாசிக்கப்படவுள்ளன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நூலாக்கம் செய்யப்பெற்று மாநாட்டில் வெளியிடப்படும். இந்த மாநாட்டில் இசை ஆா்வலா்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com