நாட்டு இன காளைகளைப் பாதுகாக்க சேலத்தில் கால்நடைப் பூங்கா

நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, தமிழக கால்நடைப்
நாட்டு இன காளைகளைப் பாதுகாக்க சேலத்தில் கால்நடைப் பூங்கா


நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக, தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக் குஞ்சு, கறவைப் பசுக்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் ரூ. 50 கோடியில், கிராமப் பகுதியில் உள்ள 77 ஆயிரம் மகளிருக்கு தலா 50 நாட்டுக்கோழி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடக்கிவைத்தார். இதையடுத்து, நாமக்கல், சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் இத்திட்டத்தின்கீழ் நாட்டுக்கோழிகள் வழங்கப்படுகின்றன. 
இம்மாவட்டத்தில் 450 பேருக்கு கறவைப் பசுக்கள், 2,400 பெண்களுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளன. பிப். 15-க்குள் 3 ஆயிரம் பேருக்கு விலையில்லா வெள்ளாடும் வழங்கப்படும். 
கறவைப் பாலுக்கான விலை குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று, நிவாரணம் பெற்றுத் தரப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவரை, காங்கேயம், நாட்டு இனக் காளைகளுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விந்து உற்பத்தி நிலையம் உள்ளது. அதேபோல, காங்கேயம் இனக் காளைகளை உற்பத்தி செய்ய உயிரணு எடுக்க சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் பகுதியில் ரூ. 2.5 கோடியில் பணி நடைபெறுகிறது.
நாட்டு இனக் காளைகளைப் பாதுகாக்க சேலம் மாவட்டத்தில் 1,600 ஏக்கரில் கால்நடைப் பூங்கா தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் 2,300 கால்நடை கிளை நிலையங்கள் உள்ளன. நிகழாண்டு மேலும் 125 கிளை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 100 கிளை நிலையங்கள் மருந்தகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் கிளை நிலையங்கள் மருந்தகங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற கணக்கெடுப்பும் நடந்து வருகிறது. அனைத்துக் கால்நடை மருந்தகங்களையும் கணினி மூலம் இணைக்கும் பணியும் நடைபெறுகிறது. 
ஒவ்வொரு கால்நடை மருந்தகப் பகுதியிலும் கறவைப் பசு, நாட்டுக் கோழி, வெள்ளாடு பெற்ற பயனாளிகளின் விவரம் உள்ளிட்டவற்றை கணினி மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர். 
பேட்டியின்போது, அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com