சரவண பவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: உயர்நீதிமன்றம் அனுமதி

சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சரவண பவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: உயர்நீதிமன்றம் அனுமதி


சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், ராஜகோபாலின் மகன் சரவணன் தாக்கல் செய்த மனுவில், பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எனது தந்தை ராஜகோபாலுக்கு சிறுநீரகத் தொற்று நோய் பாதிப்பு உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாகவே படுத்தப் படுக்கையாகவே இருந்து வரும் அவரது வலது கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வரும் ஸ்டான்லி மருத்துவமனையில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை. 
எனவே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜகோபாலின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 
இந்த வழக்கு ,நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலின் உடல்நிலை குறித்து ஸ்டான்லி மருத்துவமனை தலைவர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் ராஜகோபாலின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 
எனவே அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் அவரை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்வதை ஆபத்தானது. எனவே அவரை இடமாற்றம் செய்யும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு அரசு மருத்துவர்கள் பொறுப்பு கிடையாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும்போது நிகழும்  அசம்பாவிதங்களுக்கு மனுதாரர் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வார். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் தனியார் மருத்துவமனை செலவு முழுவதையும் மனுதாரரே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள ராஜகோபாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனுதாரரின் சொந்த செலவில் மாற்ற வேண்டும். 
சிறை விதிகளைப் பின்பற்றி இந்த இடமாற்றத்தை செய்ய வேண்டும். அதே போன்று இடமாற்றம், சிகிச்சை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மனுதாரர் மேற்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com