லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.119 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 


லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.119 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 
இது குறித்த விவரம்:-
லாட்டரி அதிபர் மார்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றதாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.யின் கொச்சிப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். சிபிஐ விசாரணையில், மார்ட்டினும், அவரது கூட்டாளிகளும் சிக்கிம் மாநில அரசுக்குச் சொந்தமான லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விற்றிருப்பது தெரியவந்தது.
இதில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910.30 கோடி பணம் மார்ட்டினுக்கு கிடைத்திருப்பதையும், அந்தப் பணத்தை மார்ட்டின் 40 நிறுவனங்களில் அசையா சொத்துக்களில் முதலீடு செய்திருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனர்.
ரூ.119 கோடி சொத்து முடக்கம்: இதில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அவர் மீது அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோதமாகக் கிடைத்த பணத்தின் மூலம் மார்ட்டின் வாங்கியதாகக் கருதப்படும் ரூ.119.6 கோடி மதிப்புள்ள 61 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், 82 காலிமனைகள், 6 கட்டடங்கள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் திங்கள்கிழமை முடக்கினர்.
இந்த வழக்குத் தொடர்பாக மேலும் பல சொத்துகளை முடக்குவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். ஏற்கெனவே சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.138.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com