எம்பிபிஎஸ் வகுப்புகள் நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1)
சென்னை,  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது கட்ட மருத்துவம், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வு. 
சென்னை,  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது கட்ட மருத்துவம், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வு. 


எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான  இரண்டாம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகின்றன. 
இதனிடையே, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட  கலந்தாய்வில், புதிதாக 20 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள எம்பிபிஎஸ் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
முதல் நாள் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 2,246 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், 1,054 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், புதிதாக 20 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முதல்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்து கல்லூரிகளில் சேராதவர்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் திருப்பி அளிக்கப்பட்ட இடங்களில் சில மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமையும் (ஜூலை 31) கலந்தாய்வு நடைபெறுகிறது. 
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று பல் மருத்துவக்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டால் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. 
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தமாக  59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
 இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது: இதையடுத்து  அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது.
இந்தநிலையில், அதில் காலியாக இருந்த இடங்களுக்கும், கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு கல்லூரியில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களுக்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைக்கும் இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. 
மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 146 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இது தவிர, சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ,  ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. 
அதேபோன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கும் 16 பிடிஎஸ் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில்,  தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்குகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com