நூறாண்டுகளாக மறைக்கப்பட்ட பெயர்கள்! : மீண்டும் சூட்டக் கோரிக்கை

நூறு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சோழ மண்டலம், மலபார் கடல் போன்ற பெயர்களை மீண்டும் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
நூறாண்டுகளாக மறைக்கப்பட்ட பெயர்கள்! : மீண்டும் சூட்டக் கோரிக்கை

புதுச்சேரி: நூறு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட சோழ மண்டலம், மலபார் கடல் போன்ற பெயர்களை மீண்டும் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 1920-ஆம்  ஆண்டுக்கு முந்தைய வரைபடங்களில் தமிழக எல்லையில் உள்ள கடலுக்கு சோழ மண்டல கடல் என்றும், கேரள எல்லையில் உள்ள கடலுக்கு மலபார் கடல் என்றும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

"வடக்கில் இமயமலை 
பாப்பா 
தெற்கில் வாழும் 
குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய 
கடல் கண்டாய் - 
இதன் கிழக்கிலும் 
மேற்கிலும் பாப்பா' 

என்று இந்திய எல்லைகளை வரையறை செய்தார் பாரதியார்.

கடல் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் நூற்றுக்கணக்கில் பரவிக் கிடக்கின்றன. மேலும், ஆழி என்ற கடல் குறித்த சொல் சங்க இலக்கியத்தில் 43 இடங்களில் வருகிறது. கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் எனவும் குறிப்பிட்டனர். இந்தியக் கடலைக் கட்டியாண்டவர்கள் முடியுடை மூவேந்தர்கள். இவர்களில் சோழர்களின் புகழ் குறித்தே, "சோழ மண்டலக் கடல்' என்று இந்தியாவுக்கு வந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சொல்லப்பட்டது. சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையைக் குறிக்கும் வகையில், ராஜேந்திர சோழனுக்கு 20.3.2015 அன்று மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.

இந்தியப் பெருங்கடல்: உலகின் மூன்றாவது பெரிய கடலான இது 7 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இது உலகின் வெப்ப மண்டலக் கடலாக விளங்குகிறது. பல சிறு கடல்களின் பெயர்களை ஒருங்கிணைத்தே, இதை இந்தியப் பெருங்கடல் எனக் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில், அரபிக் கடல், வங்காள விரிகுடா ஆகிய கடல்களும் இந்தியப் பெருங்கடலில்தான் அடக்கம். இந்தியப் பெருங்கடல் என்பது குமரிக் கடலைக் குறித்தது.

வங்காள விரிகுடா: வங்காள விரிகுடா கடலைப் பொருத்தவரை 2 கோடியே ஒரு லட்சத்து 72 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்டது. 

இந்த கடல் பகுதிக்குள்தான் சோழ மண்டலக் கடலையும் தவறுதலாக உள்ளடக்கிவிட்டதாக கடல் ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் விவரிக்கின்றனர். அவர்களின் கூற்றுபடி, சோழ மண்டலக் கடலுக்கும், வங்காள விரிகுடாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வங்க மொழி என்ற சொல்லை 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் "இடியமா பெங்கல்லா' என்று போர்த்துகீசியர்கள் அழைத்தனர். இந்தச் சொல் முகமதியர் ஆட்சிக் காலத்தில்தான் முதல் முதலில் சொல்லப்பட்டது. 16-ஆம் நூற்றாண்டில் வங்க மொழியை "கௌட மொழி' என்றே அழைத்தனர். 

வங்காள மொழி பேசும் அடிப்படையில் வங்காள தேசம் என்றும், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழும் பகுதியால் இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தானுடன் இணைந்து, பின்னர் தனி நாடாக உருவாகியிருக்கும் தற்போதைய வங்கதேசம் முந்தைய இந்தியாவின் கிழக்கு வங்கம் ஆகும். வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கப் பகுதி வரை பரந்த குடா பகுதியே விரிகுடா என  அழைக்கப்படுகிறது. 

இந்தப் பகுதியில்தான் பெரிய ஆறுகளான கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி உள்ளிட்ட ஆறுகள் கலக்கின்றன. இதையே வங்காள விரிகுடா என்று சொல்வது முறையாகும். சிறிய அளவிலான பகுதி வளைகுடா (எமகஊ) எனவும்,  பெரிய அளவிலான பகுதி விரிகுடா (ஆஅவ) எனவும் பெயர் பெற்றன. சிறிய குடா பகுதி மன்னார் வளைகுடா, பெரிய குடா பகுதி வங்காள விரிகுடா என எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

சோழ மண்டலக் கடல்: சோழ மண்டலம் என்பது மொழியில் பிழைபட "கோரமண்டலம்' என்றானது என்ற செய்தியை நீலகண்டசாஸ்திரி தனது "சோழர் நூல்' பக்கம் 438-இல் குறிப்பிடுகிறார். எனவே, தமிழகக் கடல் சோழ மண்டலக் கடல், இந்தச் சொல் ஐரோப்பியர்களின் ஒலிப்பில் வேறாக விளங்கியது. சோழ மண்டலத்தை அவர்கள் ஆங்கில மொழி உச்சரிப்பின்படி கோரோமண்டல் (இஞதஞஙஅசஈஉக) என்று அழைத்தனர். இது 1761, 1856 ஆகிய ஆண்டுகளில் ஆங்கிலேயர் வெளியிட்ட வரைபடம்,  1790-இல் பிரெஞ்சுக்காரர்கள் வெளியிட்ட வரைபடம் ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட வரைபடங்களில் சோழ மண்டலக் கடல், மலபார் கடல் ஆகியவற்றின் பெயர்கள் காணாமல் போய்விட்டன.

இதுகுறித்து, புதுச்சேரி கடல் சார் வரலாற்றுப் பேராசிரியர் ஜெயசீல ஸ்டீபன் கூறியதாவது:

29 கடல்களையும், 4 பெருங்கடல்களையும் கொண்ட இந்த உலகில் சோழ மண்டலக் கடலுக்கென ஒரு மிகப் பெரிய வரலாறு உள்ளது. சோழ மண்டலக் கடலுக்கான வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும் மலையாளக் கரை என்றும்,  மலைவாரக் கடல் அல்லது மலபார் கடல் என்றும் அழைக்கப்பட்டன. ஆல்பிரட் மார்டினோ என்ற வரலாற்றாசிரியர் மலபார் என்று மட்டுமே மேற்குக் கடலை எழுதுகிறார். இந்தச் சொல் எப்படி அரபிக் கடல் ஆனது என்ற கேள்வியை உடனடியாக அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சோழ மண்டலக் கடல் எல்லை: கோதாவரி ஆறு கடலில் கலக்குமிடம் தொடங்கி, இலங்கையின் மன்னார் வரை உள்ள கடல் பரப்பு சோழ மண்டலக் கடலுக்கான பகுதியாகும். இந்திய வரைபடங்களில் மீண்டும் சோழ மண்டலக் கடல், மலபார் கடல் ஆகிய பெயர்களை சூட்ட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து புதுவை அருங்காட்சியக நிறுவனர் அ.அறிவன் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் இருந்து வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை எழுப்பி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். வரலாற்றுப் பிழையைத் திருத்த மத்திய, மாநில அரசுகளும் முன்வர வேண்டும். நூறு ஆண்டுகாலமாக மறைக்கப்பட்ட வரலாற்று உண்மையை மீண்டும் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com