மேக்கேதாட்டுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என்று


காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு மனிதாபிமானம் சிறிதும் இன்றி வேண்டுமென்றே அடம் பிடித்து வருகிறது. அதற்குத் திரைமறைவில் மத்திய பாஜக அரசு, அரசியல் காரணங்களுக்காக ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தற்போது மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது இரு மாநில நல்லுறவுக்கு எந்த வகையிலும் உதவிடாத ஒரு சட்ட விரோதச் செயலாகும். இந்த விவகாரத்தில் அதிமுக அரசு மேக்கேதாட் அணை பிரச்னையில் மெத்தனமாக இருக்காமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி,  தடை உத்தரவினைப் பெற்றிட வேண்டும்.
அன்புமணி: மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு விண்ணப்பித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 
மேலும்,  இந்த விவகாரத்தின் அனைத்து வித பிரச்னைகளுக்கும் மூலக் காரணம் மேக்கேதாட்டு அணை ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதிதான் என்பதால், அதையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
ஜி.கே.வாசன்: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி தரக்கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com