ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை 5-ஆவது  முறையாக


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலத்தை 5-ஆவது  முறையாக மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் அதே ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையைத் தொடங்கினார்.
முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால், கடந்த 2017 டிசம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு, அதாவது 2018  ஜூன் 24  வரை ஆணையத்தின் காலத்தை தமிழக அரசு முதன்முதலாக நீட்டித்தது.
கடந்த 2018  ஜூன் 25 -ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலம் இரண்டாம் முறை 4 மாதங்களுக்கும்,  இதையடுத்து, மூன்றாம் முறையாக கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 2019 பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக  பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதால் ஆணையத்தின் காலத்தை மேலும் நீட்டிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையேற்று, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதியில் இருந்து 4 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 24-ஆம் தேதி வரை ஆணையத்தின் காலத்தை 4-ஆம் முறையாக தமிழக அரசு நீடித்தது.
வழக்கு: இந்நிலையில், ஆணையம் அமைத்துள்ள மருத்துவக் குழுவுக்குப்  பதிலாக 23 மருத்துவ நிபுணர்கள் கொண்டு குழுவை அமைக்க வேண்டும். அதுவரை விசாரணை நடத்தக் கூடாது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
5-ஆம் முறையாக நீட்டிப்பு: இந்நிலையில், ஆணையத்தின் காலம் திங்கள்கிழமையுடன் (ஜூன் 24) முடிவடைந்த நிலையில்,  அதை மேலும் 4 மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 24-ஆம் தேதி வரை 5-ஆம் முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com