முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை நெறிமுறைகள்: தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர்

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் முடிவுக்கு வந்ததால், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகம் வந்தார்.
முடிவுக்கு வந்தது தேர்தல் நடத்தை நெறிமுறைகள்: தலைமைச் செயலகம் வந்தார் முதல்வர்

சென்னை: மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றுடன் முடிவுக்கு வந்ததால், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை தலைமைச் செயலகம் வந்தார்.

தலைமைச் செயலகம் வந்து தனது வழக்கமான பணிகளை தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.  தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தலைமைச் செயலகத்தில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் மீண்டும் அதே இடத்தில் மாற்றப்பட்டன.

இதே போல அமைச்சர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் இன்று தங்களது வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அன்றைய தினம் மாலையே நடைமுறைக்கு வந்தன. இதனால், தமிழக அரசின் சார்பில் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, புதிய பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவோ இயலாத நிலை ஏற்பட்டது. மேலும், புதிய பணிகளைத் தொடங்கி வைக்கவும் தடை ஏற்பட்டிருந்தது.

முடிந்தது தேர்தல்: கடந்த மார்ச் 10-இல் தொடங்கிய தேர்தல் பணிகள், கடந்த மே 23-ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கையுடன் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் பிரச்னை நேரிட்டால் மறுவாக்குப் பதிவு போன்ற அம்சங்களுக்காக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மே 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் தமிழகத்தில் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அதில் எந்தச் சிக்கலும் இல்லாத சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமையுடன் (மே 27) முடிவுக்கு வந்துள்ளது. 

புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு: இதனிடையே, தமிழக சட்டப் பேரவையில் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியேற்றுக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com