திருவண்ணாமலையில் உள்கட்சிப் பூசலால் வெற்றியை நழுவவிட்ட அதிமுக!

உள்கட்சிப் பூசல், கூட்டணியால் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, வேட்பாளரைப் பற்றிய எதிர்க்கட்சியினரின் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களால்,
திருவண்ணாமலையில் உள்கட்சிப் பூசலால் வெற்றியை நழுவவிட்ட அதிமுக!

உள்கட்சிப் பூசல், கூட்டணியால் தொண்டர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி, வேட்பாளரைப் பற்றிய எதிர்க்கட்சியினரின் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களால், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றியை நழுவவிட்டது.
 2014 மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.வனரோஜா 5 லட்சத்து 751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை 3 லட்சத்து 32 ஆயிரத்து 145 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி: 2019 மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 6 லட்சத்து 66 ஆயிரத்து 272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
 அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி 3 லட்சத்து 62 ஆயிரத்து 85 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 3 லட்சத்து 4 ஆயிரத்து 187 வாக்குகள் வித்தியாசத்தில் சி.என். அண்ணாதுரை பெற்றி பெற்றார்.
 வெற்றியை நழுவவிட்ட அதிமுக:
 கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் மாவட்டச் செயலர் பெருமாள் கே.ராஜன் தலைமையில் ஓர் அணியும், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் மற்றொரு அணியுமாகப் பிரிந்து மாறி, மாறி போட்டியிட்டது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசத்தைப் பெற்றிருந்த மூத்த நிர்வாகி வி.பவன்குமாரை கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுத்தது, மக்களவைத் தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜனை நீக்கியது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து பரிந்துரை செய்த இளவரசிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவிலேயே ஏராளமான கோஷ்டிகள் உருவாகி இருந்தன.
 அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோரை பழிவாங்குவதற்காக உருவான இந்த கோஷ்டிகள் மாறி, மாறி தலைமையிடம் புகார்களைத் தெரிவித்து வந்தன.
 ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்த கட்சிகளுடன் இப்போது திடீரென கூட்டணி வைத்தது அதிமுகவின் உண்மை விசுவாசிகள் மட்டுமன்றி, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு இடையிலும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக கூட்டணியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தவிர இதர நிர்வாகிகள் சரிவர வேலை செய்யத் தவறிவிட்டனர். இதுதவிர, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு, அவரைப் பற்றி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி குறித்து திமுக கூட்டணிக் கட்சியினர் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டனர்.
 இவையெல்லாம் கூட அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.
 வாக்காளர்களை தங்கள் வசம் வைத்துள்ள திமுக: திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்களை அடிக்கடி சந்திப்பது, தூய்மை அருணை என்ற திட்டம் மூலம் திருவண்ணாமலை நகரை வாரம்தோறும் தூய்மைப்படுத்துவது, பொங்கல் பண்டிகைக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி பெண்களுக்குப் பரிசுகள் வழங்குவது, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளை நடத்திப் பரிசு வழங்குவது, இலவச தையல் பயிற்சி மையம் நடத்தி பல ஆயிரம் பேருக்கு சான்று அளிப்பது என ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வாக்காளர்களை தனது வசம் வைத்திருக்கும் பணியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஈடுபட்டு வந்தார்.
 ஆனால், அதிமுகவினரோ தேர்தல் சமயத்தில் மட்டுமே வந்து வாக்குச் சேகரித்தனர். இதனால் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை விட அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு 70,293 வாக்குகள் குறைவாகக் கிடைத்தது. தனது சொந்தத் தொகுதியான கலசப்பாக்கத்தில் திமுக வேட்பாளரைவிட 45,359 வாக்குகள் குறைவாகவும், பாமகவினர் அதிகம் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரை விட 54,864 வாக்குகள் குறைவாகவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெற்றார்.
 திட்டமிட்ட தேர்தல் பிரசாரம்: கடந்த தேர்தலில் சி.என்.அண்ணாதுரைக்குக் கிடைத்த தோல்வியை தனக்கான தோல்வியாகக் கருதிய எ.வ.வேலு, இம்முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பிரசார பயணங்கள், தேர்தல் பணிகளைத் திட்டமிட்டு தீவிரமாகச் செய்தார்.
 இதனால், திமுகவினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
 அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தானே வாக்குச் சேகரிக்கச் சென்றதால் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க முடியவில்லை. அதிமுகவினரும், சில கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் உள்கட்சிப் பூசலால் கடமைக்காக வேலை செய்ததே அதிமுக வேட்பாளர் தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com