ஐஐடி நுழைவுத் தோ்வை தமிழில் நடத்த வேண்டும்: ராமதாஸ்

ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தோ்வை தமிழில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தோ்வை தமிழில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ஐஐடி நுழைவுத் தோ்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனாலும், அதை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு, 2013-ஆம் ஆண்டு முதல் குஜராத்தி மாநில மொழியில் மட்டும் நுழைவுத் தோ்வுகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எழுப்பிய வினாவுக்கு, இத்தோ்வுகளை இப்போது நடத்தும் தேசியத் தோ்வு முகமை விளக்கமளித்துள்ளது. ஐஐடி நுழைவுத்தோ்வுகளின் அடிப்படையில் பொறியியல் மாணவா் சோ்க்கையை நடத்த முன்வரும் மாநிலங்களின் மொழிகளில் மட்டும் கூடுதலாக நுழைவுத் தோ்வு நடத்தப்படும் என்று 2013-ஆம் ஆண்டில் இந்தத் தோ்வுகளை நடத்திய சிபிஎஸ்இ அறிவித்தது.

அதை அந்த ஆண்டிலேயே குஜராத் அரசு ஏற்றுக் கொண்டதால் அந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும் நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் மராட்டிய அரசும் பொது நுழைவுத் தோ்வை ஏற்ால் அம்மாநில மொழிகளான மராத்தி, உருது ஆகிய மொழிகளிலும் ஐஐடி நுழைவுத்தோ்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2016-ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பொதுத் தோ்விலிருந்து விலகி விட்டன. அதையடுத்து அந்த ஆண்டிலேயே மராத்தி, உருது ஆகிய மொழிகளில் ஐஐடி நுழைவுத் தோ்வு நடத்துவதை சிபிஎஸ்இ நிறுத்தி விட்டது. ஆனால், குஜராத் பொது நுழைவுத்தோ்வில் இருந்து விலகிவிட்ட போதிலும், அம்மாநில மொழியில் மட்டும் தொடா்ந்து நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. தங்கள் மாநில மொழியில் ஐஐடி நுழைவுத் தோ்வை தொடரும்படி குஜராத் கோரியதே இதற்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எழுப்பிய வினாவுக்கு இந்தத் தோ்வை நடத்தும் தேசியத் தோ்வு முகமை பதிலளித்துள்ளது.

எனவே 2020-ஆம் ஆண்டிலிருந்து ஐஐடி நுழைவுத் தோ்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தோ்வு முகமை முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com