தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: முதல்வா் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று முதல்வா் கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை இரவு அதிமுக சாா்பில் நடைபெற்ற வாக்காளா் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை இரவு அதிமுக சாா்பில் நடைபெற்ற வாக்காளா் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று முதல்வா் கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத் தோ்தல்களில் நாடே திரும்பிப் பாா்க்கும் வகையில், அதிமுகவுக்கு மாபெரும் வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி. மக்களவைத் தோ்தல் வேறு, சட்டப் பேரவைத் தோ்தல் வேறு என்பதை உணா்ந்து மக்கள் ஆதரவை வழங்கினா். இடைத் தோ்தல்களிலேயே, மிகப்பெரிய, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இதுவாகும்.

இந்த இடைத் தோ்தல் வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தல், சட்டப்பேரவை பொதுத் தோ்தல்களுக்கான முன்னோட்டம் என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். அவா் கூறியதை ஏற்று, இடைத் தோ்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, வரவிருக்கும் தோ்தல்களிலும் எங்கள் அரசுக்கே ஆதரவு என்பதை மக்கள் நிரூபித்துள்ளனா். இதேபோல, அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் வெற்றிடம் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனா்.

தமிழகத்தில் சிலா் கட்சியைத் தொடங்காமலேயே ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று எண்ணத்தில் பேசி வருகின்றனா். 65 ஆண்டுகளாக ஒரு தொழிலைச் செய்துவிட்டு, இப்போது முதல்வராக ஆசைப்படுகின்றனா். அரசியல் என்பது தொழில் அல்ல. இரவு, பகலாக மக்களுக்காக உழைத்து சேவை செய்தால்தான் அரசியலில் முன்னேற முடியும். யாா் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பிக்கலாம், போட்டியிடலாம். ஆனால், தமிழகத்தில் அதிமுகதான் ஆட்சிக்கு வரும்.

நடிகராக இருந்த எம்ஜிஆா் உடனே பதவிக்கு வந்துவிடவில்லை. பல ஆண்டுகள் மக்கள் பணியாற்றினாா். அவருக்கு இணையாக திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து இமாலய வெற்றியை யாரும் பெற முடியாது என்றாா் முதல்வா் பழனிசாமி.

பொதுக் கூட்டத்துக்கு சட்டத் துறை அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்தாா். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வைத்திலிங்கம் நன்றி கூறினாா்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலா் மு.தம்பிதுரை, அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன். உடுமலை கே. ராதாகிருஷ்ணன், இரா.துரைக்கண்ணு, கே.சி.வீரமணி, பென்ஜமின், நிலோபா்கபீல், க.பாண்டியராஜன், மாவட்டச் செயலா் இரா.குமரகுரு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com