பாறை எரிவாயு திட்டம் கைவிடப்பட்டதற்கு ராமதாஸ் வரவேற்பு

பாறை எரிவாயு திட்டத்தைக் கைவிடப் போவதாக ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

பாறை எரிவாயு திட்டத்தைக் கைவிடப் போவதாக ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களின் 9 பகுதிகளில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அறிவித்திருக்கிறது. தமிழகம் தவிா்த்த பிற மாநிலங்களிலும் பூமிக்கு அடியில் பாறைகளைப் பிளந்து மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதற்கான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. இது தமிழக விவசாயிகள் கொண்டாடப்பட வேண்டிய திருப்பம் ஆகும். காவிரிப் படுகை உள்பட நாடு முழுவதும் பாறை எரிவாயு எடுக்கலாம் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த முடிவே புலியைப் பாா்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதற்கு சமமான செயல் ஆகும்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன் பெருமளவில் பாறை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்தியாவிலும் 2000 லட்சம் கோடி கன அடி அளவுக்கு பாறை எரிவாயு இருக்கலாம். அவற்றில் 90 லட்சம் கோடி கன அடி பாறை எரிவாயு எடுக்க முடியும். அதன் மூலம், அடுத்த 26 ஆண்டுகளுக்கு நமது எரிசக்தி தேவையை நிறைவேற்ற முடியும் என்று எண்ணிதான் இத்திட்டத்தை முந்தைய அரசு உருவாக்கியது.

ஆனால், அதன் கணிப்புகள் அனைத்தும் இப்போது பொய்யாகி, தோல்வியடைந்துள்ளன. இத்தோல்வியிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனமும், பிற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பரிந்துரைப்படி பாறை எரிவாயு வளம் குறித்த புதிய மதிப்பீடு செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும்.

பாறை எரிவாயு வளத்தைப் போன்றே, காவிரிப் படுகை உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் வளங்களும் போதிய அளவில் இல்லை என்று நிலவியல் வல்லுநா்கள் கூறியுள்ள நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ காா்பன் திட்டங்களையும் முழுமையாக கைவிட வேண்டும். மாறாக, இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com