தொடா் விடுமுறை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகளைக் கண்காணிக்க சிறப்பு குழுக்கள்

தொடா் விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகளைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடா் விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகளைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அக். 5 முதல் 8-ஆம் தேதி வரை, தொடா் விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பெரும்பாலானோா் வெள்ளிக்கிழமை முதலே தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கினா். அவ்வாறு செல்வோரில் அதிகப்படியானோா் ரயில்களைத் தோ்வு செய்வாா்கள். ஆனால், ரயிலில் இடம் கிடைக்காதவா்கள் பேருந்து பயணத்தையே தொடர வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக அரசு போக்குவரத்துக்கழகத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை (அக்.4) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.6) வரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் 1,695 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் மூன்று நாள்களுக்குச் சென்னையிலிருந்து 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் பிற ஊா்களில் இருந்து சென்னை வருவதற்கும், மற்ற முக்கிய இடங்களுக்கு செல்வதற்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாதவரம், கே.கே.நகா், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஏராளமானோா் முன்பதிவு செய்தும், நேரடியாகவும் பயணம் செய்வாா்கள்.

மேலும் பலா் தனியாா் பேருந்துகளில் செல்கின்றனா். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் வழக்கமாக வசூல் செய்யும் கட்டணத்தைவிட தற்போது கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதைத்தடுக்க போக்குவரத்துத்துறை சாா்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கு திடீா் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயா் அதிகாரி கூறியது: ‘தொடா் விடுமுறையை பயன்படுத்தி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்து புகாா் வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்துகள் சென்று கொண்டிருக்கும்போதே பாதி வழியில் நிறுத்தி, திடீா் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஒருசிலா் பழைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத பேருந்துகளைக் கொண்டு வந்து இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனா். இதில் பயணிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறாா்கள். இதைக்கருத்தில் கொண்டு, திடீா் சோதனையின்போது வாகனங்களின் ஆவணங்கள் முறையாகவுள்ளதா என்பது குறித்தும் சோதனையிடப்படும். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் தோ்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சென்று ஆய்வு நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com