புதிய சாலை-கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கான அறிக்கை தயாரிப்புக்கு ரூ.289 கோடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

புதிய சாலை மேம்பாடு, வெளி மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்க ரூ.289.82 கோடி நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை-கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கான அறிக்கை தயாரிப்புக்கு ரூ.289 கோடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


புதிய சாலை மேம்பாடு, வெளி மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்க ரூ.289.82 கோடி நிதி ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்கட்டமைப்பு மேம்பாடு வாரியத்துடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர், தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது ஆய்வு செய்த கட்டமைப்புகள் குறித்து விவாதித்தார். அதுபோன்று உயர்தரமான கட்டமைப்புகளை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டுமென  அவர் எடுத்துக் கூறினார்.
புதிய திட்டங்கள் எவை: தமிழகத்தில் சென்னை நிதி தொழில்நுட்ப நகரம், ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சித் திட்டம், சென்னை ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிட மேலாண்மை திட்டம், சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் போன்று அரசு நிறுவனங்களின் நிலங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளை நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இலகு ரயில் பயணத்திட்டம், வெளி வட்டச் சாலை - தொழில் மேம்பாட்டுத் திட்டம், கடல் அருங்காட்சியகம் அமைத்தல், அறிவியல் நகரத்தில் தொழில்நுட்பம் மூலம் அறிவுசார் காட்சியகம் அமைத்தல், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் பொழுதுபோக்கு காட்சியகம், மெடி பார்க் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
சாலை மேம்பாடு: சென்னை-கன்னியாகுமரி, சென்னை-பெங்களூர் சாலை வழித்தடத் திட்டங்கள், நடந்தாய் வாழி காவிரி திட்டம், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, திருப்பூர் மாநகராட்சிகளில் கழிவுநீர் மறுசுழற்சி செய்யும் திட்டங்கள், 
சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம், சென்னையில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம், தூத்துக்குடி முள்ளக்காடு கிராமம், ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழி கிராமம், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகள் ஆகியவற்றில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கான செயல் திட்டம் பற்றி முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
ரூ.289 கோடி நிதி: புதிய திட்டங்களை விரைவில் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுரைகளை வழங்கினார். இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பும் ஏற்படும். புதிய திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கென தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்துக்கு ரூ.289.82 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com