தமிழகத்தில் ரூ.133 கோடியில் புதிய வேளாண் கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.133 கோடியில் கட்டப்பட்ட புதிய வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 


தமிழகத்தில் ரூ.133 கோடியில் கட்டப்பட்ட புதிய வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்ட புதிய அரங்கம், தேர்வு அறை ஆகியவற்றையும், திருவண்ணாமலை மாவட்டம் வாழச்சனூரில் கூடுதல் விரிவுரை அரங்கம், ஆய்வகம், திருச்சி மாவட்டம் குமுளூரில் படிப்பு மையங்கள், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை மாணவர் விடுதிக் கட்டடம், புதுக்கோட்டை வம்பனில் தேசிய பயறு ஆராய்ச்சி மையத்தில் படிப்பு மையம், திருச்சி ஸ்ரீரங்கத்தில் வகுப்பறை, பரிசோதனை கட்டமைப்புகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லூர், பி.கே.அகரம், எம்.புத்தூர், அரசலூர், பிடாரமங்கலம், துறையூர், தெற்கு உப்பிலியாபுரம், தாத்தயங்கார்பேட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், புதூர் ஆகிய இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி, வள்ளியூர், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், கடையநல்லூர் 
ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய வசதிகளை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
சேமிப்புக் கிடங்குகள்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர், ஆரணியில் 2 சேமிப்புக் கிடங்குகள், காஞ்சிபுரம், உத்தரமேரூரில் 2 சேமிப்புக் கிடங்குகள், தூத்துக்குடியில் ஒரு சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். வேளாண்மைத் துறையில் மொத்தமாக ரூ.133.62 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை அவர் திறந்தார்.
தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும் தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கவும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com