தேர்தல் நேர க(கா)ட்சிகள்!

அகில இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சில கட்சிகள் களமிறங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது
தேர்தல் நேர க(கா)ட்சிகள்!

அகில இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சில கட்சிகள் களமிறங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. இப்படி தேர்தல் களம் காணும் புதிய கட்சிகளில் பல காணாமல் போன வரலாறும் உண்டு. அவற்றில் சில தொடர்ந்து அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதையும் தமிழகம் பார்த்திருக்கிறது.

 1952-இல் சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலின் போது இப்போது போல தமிழ்நாடு என்கிற தனி மாநிலம் இருக்கவில்லை. அப்போது இது சென்னை ராஜதானி என்று அறியப்பட்டது. நிஜாமின் ஆளுமைக்கு உள்பட்ட ஹைதராபாத் பகுதிகள் இல்லாத ஏனைய தெலுங்கு பேசும் பகுதிகள் (ஏறக்குறைய இப்போதைய ஆந்திரம், தெலங்கானா) சென்னை ராஜதானியில் இருந்தன. அதேபோல, மைசூர் சமஸ்தானம் அல்லாத பிரிட்டிஷ் ஆளுமையில் இருந்த கர்நாடகத்தின் பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்கள் அல்லாத மலபார் என்று பரவலாக அழைக்கப்படும் வட கேரளம், சென்னை ராஜதானியில் இடம் பெற்றிருந்தது.

 1952 பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசம், மலபார் பகுதிகளில் அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி சக்திவாய்ந்ததாக இருந்ததால், சென்னை ராஜதானிக்கு நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்தத் தேர்தலில் இரண்டு சிறிய கட்சிகள் தமிழகத்தின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தன. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் மாணிக்கவேல் நாயகர் தலைமையிலான காமன் வீல் கட்சியும், தென்னாற்காடு மாவட்டத்தில் ராமசாமி படையாச்சி தலைமையிலான உழைப்பாளர் கட்சியும் முறையே 6 இடங்களிலும், 19 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
 எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சென்னை ராஜதானியின் ஆளுநராக இருந்த ஸ்ரீபிரகாசா, கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி ஆட்சி அமைக்க முன்வந்தால் அவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் சாசனப் படி, ஒருவரால் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்தி நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் கருதினால், அவர் உறுப்பினராக இல்லாவிட்டாலும் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு காங்கிரûஸக் காப்பாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, சென்னை ராஜதானியின் பிரதமராக (அப்போது முதல்வர் பிரதமர் என்றுதான் அழைக்கப்பட்டார்) பதவியேற்க முன்வந்தார். ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று மாணிக்கவேல் நாயகரும், ராமசாமி படையாச்சியும் ராஜாஜி அரசுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டனர். காலப்போக்கில் காமன் வீல் கட்சியும், உழைப்பாளர் கட்சியும் காங்கிரஸில் இணைந்து கரைந்து போயின.

 1957 பொதுத் தேர்தலின்போது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. இப்போதிருக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழும் சென்னை மாநிலமாக மாறிவிட்டிருந்தது முந்தைய சென்னை ராஜதானி. 1957-இல் நடந்த தேர்தலில்தான் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக தேர்தல் களம் கண்டது. குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிட்டு 1957 தேர்தலின் புதிய வரவான திமுக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்றாலும், தமிழக அரசியலில் இன்றுவரை ஓர் அரசியல் கட்சியாக வலம் வருகிறது.

 1962-ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் பரபரப்பாக களம் கண்ட புதிய கட்சி ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி. இன்றைய பொருளாதார சீர்திருத்தம், தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட கொள்கைகளை தொலைநோக்குப் பார்வையுடன் அப்போதே தனது கொள்கையாக முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் சோஷலிசத்துக்கு மாற்றாக சுதந்திரா கட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே 1962 தேர்தலில் பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் அந்தக் கட்சி ஏற்படுத்தியது.

 1962-க்கும் 1967-க்கும் இடையில் இரண்டு முக்கியமான அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. வளர்ந்து வரும் திமுக பிளவைச் சந்தித்தது. திமுகவில் சி.என். அண்ணாதுரைக்கு அடுத்தபடியான தலைவராக இருந்த ஈ.வி.கே. சம்பத் கட்சியில் இருந்து வெளியேறினார். கண்ணதாசன், பழ. நெடுமாறன், எம்.பி. சுப்பிரமணியம் என்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் ஈ.வி.கே. சம்பத்துடன் வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்கிற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள். அந்தக் கட்சி சில ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுடன் இணைந்துவிட்டது.

 சீனப் போரின் பின்னணியில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி 1964-இல் மிகப் பெரிய பிளவைச் சந்தித்தது. ஏ.கே. கோபாலன், பி. இராமமூர்த்தி, ஜோதிபாசு, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் உள்ளிட்ட பல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள். கொள்கை ரீதியாக இரண்டு கட்சிகளுமே மார்க்சிஸத்தின் அடிப்படையில் செயல்பட்டாலும், இன்றுவரை தனித்தனி இயக்கங்களாகவே தொடர்கின்றன. பிளவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் பலவீனமடைந்து திராவிடக் கட்சிகளின் ஆதரவில்தான் தேர்தலை சந்திக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

 1967-இல் நடந்த நான்காவது சட்டப்பேரவை தேர்தல், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்ஜிஆர் மீதான துப்பாக்கிச் சூடு போன்ற பல பரபரப்பான நிகழ்வுகளின் பின்னணியில் அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரஸுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

 1967 தேர்தலில் களம் கண்ட இரண்டு கட்சிகள் ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகமும், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர்கட்சியும். தமிழரசுக் கழகம் 1946 முதல் இருந்தாலும்கூட, ம.பொ.சி. தேர்தலில் களம் கண்டது 1967-இல்தான்.

 அன்றைய ஆளுங்கட்சியான காங்கிரûஸ வீழ்த்துவதற்கு திமுகவின் தலைமையில் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், முஸ்லிம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவை அமைத்த கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் தமிழரசுக் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்றன. இரண்டு கட்சிகளுமே அந்தத் தேர்தலுடன் தங்களது தனித்துவத்தை இழந்தும் விட்டன.

 1971-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் அது. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸா அல்லது காமராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் அந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றது. அது மட்டுமல்லாமல், 1967-இல் ஆட்சியைப் பிடித்து அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு முதல்வராகவும் திமுக தலைவராகவும் செயல்பட்ட மு. கருணாநிதியின் தலைமையில் திமுக எதிர்கொண்ட முதல் தேர்தல் அது.

 அதுவரை மக்களுக்குப் பழக்கமான காங்கிரஸ் கட்சியின் இரட்டை காளைச் சின்னம் முடக்கப்பட்டு, ஸ்தாபன காங்கிரஸ் ராட்டை சின்னத்திலும், இந்திரா காங்கிரஸ் பசுவும் கன்றும் சின்னத்திலும் போட்டியிட்டன. ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் ஒருபுறமும், இந்திரா காங்கிரஸுடன் சேர்ந்து திமுக ஒருபுறம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸும், ராஜாஜியால் துவங்கப்பட்ட சுதந்திரா கட்சியும் பின்னாளில் ஜனதா கட்சியில் இணைந்துவிட்டதால், வரலாறாக மாறிவிட்டன.
 - தொடரும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com