தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது

தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) மாலையுடன் ஓய்கிறது.

தமிழகத்தில் மக்களவை, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 16) மாலையுடன் ஓய்கிறது.
 பிரசாரத்துக்கு மிகக் குறுகிய கால அளவே இருப்பதால் தலைவர்கள் அனைவரும் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 இதனிடையே, பிரசாரம் ஓயவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
 இதுவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த, தொகுதிக்கு தொடர்பில்லாத வெளி நபர்கள் அனைவரும் பிரசாரம் முடிந்ததும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
 தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 தேர்தலுக்கான நடத்தை நெறிமுறைகள் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியது.
 கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 இதேபோன்று, திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 பிரசாரம் ஓய்கிறது: தமிழகத்தில் வாக்குப் பதிவு வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரசாரம் வரும் 16-ஆம் தேதி மாலையுடன் ஓய்கிறது.
 மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓயும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
 பல்வேறு தொகுதிகளில் தேர்தல் பிரசார பணிகளில் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 பிரசாரம் ஓயும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கியுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 தீவிர வாகனச் சோதனை: தேர்தல் பிரசாரம் ஓயவுள்ள சூழலில், தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.129.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 வாகனச் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com