சுடச்சுட

  

  அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் சில தேர்தல் விளம்பரங்களுக்குத் தடை: அது எவை?

  By DIN  |   Published on : 16th April 2019 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  admk-dmk

  admk-dmk

   

  அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதிப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

  திமுக - காங்கிரஸ் கட்சிகளின் காட்சி விளம்பரங்கள் தொடர்பான புகார் மனுக்களை அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் திங்கள்கிழமை அளித்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தலா ஒரு காட்சி விளம்பரங்களுக்குத் தடை விதித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

  அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபுமுருகவேல் அளித்த மனுவில், விவசாயி இறந்து போனது போன்று அவரின் உடலை வைத்து தேர்தல் விதிகளுக்கு மாறாக மக்களிடையே அச்ச உணர்வைத் தூண்டும் வகையில் காங்கிரஸ் காட்சி விளம்பரம் வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை அடையாளப்படுத்தும் வகையில் மதச் சின்னங்களை அணிந்த 3 நபர்கள் ஒருவரை ஒருவர் வன்மத்துடன் பார்ப்பது போன்று திமுக காட்சி விளம்பரம் வெளியிடுகிறது. இதற்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
  இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அதிமுக குறிப்பிட்ட இரண்டு விளம்பரங்களையும் காட்சி ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

  அதிமுக விளம்பரங்களுக்கும் தடை: திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களைப் போன்றே அதிமுக வெளியிட்ட பிரசார விளம்பரங்களில் மூன்றுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  நில அபகரிப்பு, இலங்கைத் தமிழர் பிரச்னை, சர்க்காரியா தொடர்பாக அதிமுக வெளியிட்ட விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  தமிழகத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரங்கள் ஓய்வு பெறும் நிலையில், கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai