முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவில் இருந்து நீக்கம்: காரணம் என்ன?

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் முன்னாள் அமைச்சர் முல்லை
முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவில் இருந்து நீக்கம்: காரணம் என்ன?


சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுக-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 தருமபுரி மக்களவைத் தேர்தல் தோல்விக்குக் காரணம் காட்டி, திமுக-வில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்பு தர்மபுரி தோல்விக்கு நான் மட்டும் காரணமில்லை என முல்லைவேந்தன் குரல் எழுப்பினார். இதனை சற்றும் விரும்பாத கட்சி நிர்வாகம் முல்லைவேந்தனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது.

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முல்லை வேந்தன் தேமுதிக- வில் இணைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராகவும், தேமுதிகவுக்கு ஆதரவாகவும் முல்லைவேந்தன் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். அதன் பிறகு திமுக தலைவர் கருணாநிதி அழைத்து பேசியதன் பேரில் தேமுதிக-வில் இருந்து விலகினார் முல்லைவேந்தன்.

பின்பு கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவரை சந்திப்பதற்காக நேரில் வந்தார் முல்லை வேந்தன்.  அப்போது தான் மீண்டும் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் முல்லை வேந்தனுக்கு பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் திமுகவில் இணைந்தார். 

முல்லை வேந்தன் கட்சியில் இணைந்த பின்பு அவரை சாதாரண உறுப்பினராகவே கட்சி தலைமை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முல்லைவேந்தன் விரும்பியதாகவும், ஆனால் விருப்பமனு பெற வேண்டாம் என்று திமுக தலைமை கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனை சற்றும் எதிர்பாராத முல்லை வேந்தன் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி முல்லைவேந்தனை தோட்டத்தில் சந்தித்து பேசியதாகவும், அப்போது முல்லைவேந்தன் அன்புமணிக்கு தனது ஆதரவினை தெரிவித்தாகவும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வழி அனுப்பி வைத்தாகவும் செய்திகள் வெளியானது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com