வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெறவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிட்டது.
 வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் களத்தில் இருந்தார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
 இந்நிலையில், கடந்த மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் துரைமுருகன் வீடு, பள்ளி, கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும், திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கு, அவரது சகோதரியின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டது.
 கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட இந்தப் பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்தது.
 இந்நிலையில், இந்த அதிரடி சோதனை தொடர்பாக வருமான வரித் துறையினர், தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை அறிக்கை அளித்திருந்தனர். அந்த அறிக்கையை ஆராய்ந்த தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. இதனால், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு திங்கள்கிழமை நள்ளிரவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த சூழலில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "சட்ட அமைச்சகத்தின் அறிவிக்கை தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் முறைப்படி அறிவிப்பார்' என்றனர்.
 இடைத் தேர்தல் நடத்தப்படும்: இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி:-
 வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அந்தத் தொகுதிக்கு உள்பட்ட குடியாத்தம், ஆம்பூர் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடைத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும். வருமான வரித் துறை அறிக்கைகள், மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுப்படி அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்ற காரணிகளால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும், இடைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படும். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.
 "வேலூரில் சுதந்திரமான - நியாயமான தேர்தல் நடத்த முடியாது'
 சில வேட்பாளர்கள், அரசியல் கட்சியினரின் சட்ட விரோத செயல்பாடுகளால் வேலூரில் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. அதன் விவரம்:-
 வேலூரில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் திருப்தி தெரிவிக்கிறது. ஆனால், வேலூரில் சில வேட்பாளர்களும், அரசியல் கட்சியின் சில தொண்டர்களும் சட்ட விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையிலேயே வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை அனுமதித்தால் அது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை மிகக் கடுமையாகப் பாதிக்கச் செய்யும்.
 எனவே, இந்திய அரசமைப்புச் சட்டம் 324-இன் பிரிவு 21-இன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த மார்ச் 19-இல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை ரத்து செய்துள்ளார். எனவே, மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கைப் பட்டியலில் இருந்து வேலூர் மக்களவைத் தொகுதி மட்டும் நீக்கம் செய்யப்படுகிறது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், சுதந்திர இந்திய வரலாற்றில் பணப் பட்டுவாடாவால் தேர்தல் ரத்துச் செய்யப்பட்ட முதலாவது மக்களவைத் தொகுதி இதுவாகும். இதேபோன்று, தமிழகத்தில் 2017-இல் சென்னை ஆர்.கே. நகர் பேரவை தொகுதி இடைத்தேர்தல், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை மட்டுமே ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பணம் விநியோகிக்கப்பட்ட மற்ற இடங்களில் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிடவில்லை எனக் கருதுகிறேன். இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. தேர்தல் ரத்து குறித்து தற்போதுதான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து, திமுக வழக்குரைஞர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
 - துரைமுருகன்,
 திமுக பொருளாளர்

வேலூரில் தேர்தலை ரத்து செய்தது திமுகவுக்கு நல்ல பாடம். தேர்தல் ஆணையம் நன்றாக ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளது. தேர்தலை ரத்து செய்ததைவிட, திமுகவின் வேட்பாளர் கதிர்ஆனந்த் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும்.
 -டி.ஜெயக்குமார்,
 அமைச்சர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com