பூண்டி ஏரியில் குறைந்து வரும் நீர் இருப்பு: விவசாய நிலங்களில் இருந்து நீர் எடுத்து அனுப்ப தீவிர ஏற்பாடு

பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் எடுத்து சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின
பூண்டி ஏரியில் குறைந்த அளவே உள்ள நீர்.    
பூண்டி ஏரியில் குறைந்த அளவே உள்ள நீர்.    

பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் எடுத்து சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும் இணைப்புக் கால்வாய் வழியாக அனுப்பப்பட்டு, அங்கிருந்து சென்னை மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும், நீர்வரத்துக் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் போதிய  மழை பெய்யாததாலும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பூண்டி ஏரியில் தற்போது 200 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், நீர் மட்டம் 20 அடிக்கு கீழ் குறைந்ததால் சென்னை ஏரிகளுக்கு நீர் திறக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

பற்றாக்குறையைச் சமாளிக்க...: திருவள்ளூர் பகுதியில் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் பூண்டி ஏரிக்கரையோரம், நீர்வரத்துக் கால்வாய்ப் பகுதிகள், திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் சாலையில் கொசஸ்தலை ஆற்றுப் பகுதிகள் ஆகியவற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து நீர் எடுத்து அதை சுத்திகரிப்பு தொட்டிகளில் சுத்தம் செய்து சென்னை குடிநீருக்கு நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

இப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீர் இல்லாததாலும், மழை பெய்யவில்லை என்பதாலும் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆழ்குழாய்க் கிணறுகளில் நீர் ஆதாரம் குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல், கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து இல்லாததால் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கோடைக் காலத்தை சமாளிப்பதற்காக, நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும், ஆழ்
குழாய்க் கிணறுகளிலும் நீர் ஆதாரம் குறைந்து வருவதால், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் ஒப்பந்தம்: 

தனியார் விளைநிலங்களில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முயற்சியில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள காந்திநகர், தங்கானூர், சிறுவானூர், புல்லரம்பாக்கம், கொசவன்பாளையம், கண்டிகை உள்ளிட்ட ஏரிகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நிலத்தடி நீரை எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதேபோல், திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் சாலையில் மாதரைகண்டிகை, கீழனூர், வெள்ளியூர், ஈக்காடு கண்டிகை உள்ளிட்ட கிராமங்களிலும் தனியார் விளைநிலங்களில் தண்ணீர் எடுக்க பொதுப்பணித் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி, சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு அனுப்புவதற்காக தண்ணீர் எடுப்பதால், இந்த கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு தண்ணீர் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

நீர் உந்து நிலையம், கிணறு தளம் சீரமைப்பு

இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோடைக் காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கிலேயே விவசாயிகளிடம் இருந்து குடிநீர் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீரை சரியான முறையில் சேகரித்து அனுப்புவதற்காக திருவள்ளூர் பகுதி கிராமங்களில் சாலையோரங்களில் சென்னைக்கு குடிநீர் செல்லும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகிலேயே 50 ஆயிரம் லிட்டர் முதல் 1 லட்சம் லிட்டர் வரை நீரேற்றம் செய்யும் வகையில் குடிநீர் சேகரிப்புக் கிணறுகளும் சீரமைக்கப்பட்டு, தயாராக வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும் 1.40 லட்சம் லிட்டர் நீர் பெறப்பட்டு, சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது' என்று தெரிவித்தார். 

கட்டாயம் இல்லை 

இது குறித்து காந்தி நகரைச் சேர்ந்த விவசாயி மாரி(60) கூறியது:

சென்னை குடிநீர்த் தேவைக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது, பயிருக்குப் பயன்படுத்திய நீர் போக, குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் தர முன்வரும் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மணிநேரத்திற்கு ரூ.40 கட்டணம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இவ்வளவு நேரம் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. முக்கியமாக விவசாயிகள் 
பம்புசெட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டதற்கு, விவசாயிகள் மறுத்தனர். அதனால், அந்தக் கட்டணத்தை ஏற்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இப்பகுதியில் ஒவ்வொரு விளைநிலத்தில் இருந்தும் குழாய்கள் கிணறு தளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு குழாய் இணைப்பிலும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாதந்தோறும் தண்ணீருக்கான கட்டணம் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com