வேலூர், நீலகிரி, குமரி, கோவையில் கன மழை: காஞ்சிபுரத்தில் ஆலங்கட்டி மழை: சென்னையில்??

தமிழகத்தில் வேலூர், நீலகிரி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
வேலூர், நீலகிரி, குமரி, கோவையில் கன மழை: காஞ்சிபுரத்தில் ஆலங்கட்டி மழை: சென்னையில்??


சென்னை: தமிழகத்தில் வேலூர், நீலகிரி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பிற்பகலில் இருந்து கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் பெய்த கன மழையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று நீலகிரி மாவட்டம், வேலூர், கோவையில் பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். (இந்த செய்திகளைப் பார்த்து சென்னை மக்கள் கொஞ்சம் காண்டானார்கள்.) ஆனால் சென்னையிலும் இன்று கோடை வெயில் கொளுத்தாமல் இதமான வெப்பநிலையே நிலவியது.

திருவள்ளூர், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் ஆங்காங்கே லேசான தூறல் போட்டுள்ளது. ஆனால் மழைக்கான வாய்ப்பு தென்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது என்னவென்றால், தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களை கன மழை வெளுத்து வாங்கியது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இந்த ஆண்டு அதிக மழையைப் பெற்றுள்ளன. இன்று முதல் புதன்கிழமை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். பிறகு அது படிப்படியாகக் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத் துவக்கத்தில் தமிழகத்துக்கு ஒரு நல்ல மழை வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் அதை உறுதி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும். நிச்சயம் இது ஏற்படும் என்று நம்புவோம்.

ஆனால் அது பற்றி இப்போதே சொல்வது சரியாக இருக்காது. உறுதியானதும் அதுபற்றி சொல்கிறேன். ஒரு வேளை அது தமிழகத்துக்கு என்றால் நிச்சயம் அந்த மழை விருந்தில் சென்னையும் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனவே, சென்னைக்கு இப்போதைக்கு மழை வாய்ப்பு இல்லை. ஆனால் இப்படியே மேக மூட்டத்துடன் இருந்தால் கூட சென்னைவாசிகளின் பெருமூச்சு சற்று தணியும் என்று எதிர்பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com