ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த மனு தள்ளுபடி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்த மனு தள்ளுபடி


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
முன்னதாக, தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இதனால் அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு கைவிடப்பட்டது. எனவே அவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனக் கூற முடியாது. 
மேலும் மனுதாரர், அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என வழக்குத் தொடர்ந்துள்ளாரே தவிர, இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்க்கவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசுக்கு கொள்கை முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்புக்கு எதிராக எம்.எல்.ரவி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
மனுதாரரும், வழக்குரைஞருமான எம்.எல். ரவி, தனது சார்பில் தானே ஆஜரானார். அவரது மனுவை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டுமா? மனுவை பரிசீலித்ததிலிருந்து, இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com