நீர்நிலைகளை மீட்டெடுத்தால் வறட்சியை எதிர்கொள்ள முடியும்!: தலைமைச் செயலாளர் க.சண்முகம்

நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் மூலம் பேரிடர்களில் ஒன்றான வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார்.


நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் மூலம் பேரிடர்களில் ஒன்றான வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார்.
சென்னையில் பேரிடர் தொடர்பான மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணப் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதனை தலைமைச் செயலாளர் க.சண்முகம் தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக நடந்த கருத்தரங்கில் அவர் பேசியது:
ஒவ்வொரு பேரிடரும் ஒரு  புதிய பாடத்தைக் கற்றுத் தந்துவிட்டுச் செல்கிறது. அதன் மூலம் நமது அறிவை விரிவாக்கி, அதற்கேற்ற தயார் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
சுனாமி ஏற்பட்ட போது கற்ற பாடத்தை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வர்தா, ஒக்கி, கஜா புயல்களின் போது,  அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இயற்கையை வெற்றி பெற மனித வர்க்கம் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெற்றி பெற முடியாது; மேலாண்மைதான் செய்ய முடியும். பேரிடர் காலங்களில் தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணியில் ஈடுபட வேண்டும்? முதலில் யாருக்குத் தகவல் தர வேண்டும்? போன்ற விவரங்களை கற்றுக்கொள்ள முடியும்.
 புயல் வரக்கூடிய காலங்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே அதனை எதிர்கொள்ளத் தயாராகி விடலாம். அனைவரையும் தயார்படுத்த முடியும். என்னதான் தயாராக இருந்தாலும், அது வேறு புதிய கோணத்தில் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். அதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிந்து அதற்கேற்ற தயார் நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பேரிடர் அனுபவங்களை  தேச எல்லை கடந்து அறிய முடிவதே சிறப்பானது.
நீர்நிலைகள் மீட்டெடுப்பு: பேரிடரை எதிர்கொள்வதில் நீண்டகாலத் திட்டம் நமக்குத் தேவை. இதில் மத்திய அரசின் உதவியை நாம் நாடுவதில்லை. அவர்கள் வரவில்லை என்றாலும் நாமே மேலாண்மை செய்கிறோம். மத்திய அரசிடம் உதவிகளைக் கேட்டாலும், அங்கிருந்து தரும் உதவிகள் போதுமான அளவில் இருப்பதில்லை. வறட்சி என்பது மற்றொரு வகையான பேரிடர். நீர்நிலைகளை அரசு மீட்டெடுத்து வருகிறது. எனவே, வறட்சியை எதிர்கொள்ள அது உதவும் என்றார் தலைமைச் செயலாளர் க.சண்முகம்.
முன்னதாக, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் வரவேற்றார். கருத்தரங்கில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் மார்வா, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

14 இடங்களில் ஒத்திகைப் பயிற்சி 
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 14 இடங்களில் பேரிடருக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் எப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான செயல் விளக்கக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகம் பகுதியில் கடற்படையின் ஒத்துழைப்புடன் பேரிடருக்கான ஒத்திகை நடைபெறவுள்ளது. மேலும், சென்னை சீனிவாசபுரம், தீவுத்திடல், கடலூர் கிள்ளை வடக்கு, கன்னியாகுமரி சின்னவிளை, நாகப்பட்டினம் வானகிரி, புதுக்கோட்டை கோட்டைபட்டினம், ராமநாதபுரம் தொண்டி, கல்பார், தஞ்சாவூர் காரண்குடா, தூத்துக்குடி கொம்புதுரை, திருநெல்வேலி கூடுதாழை, திருவள்ளூர் பழவேற்காடு, திருவாரூர் தில்லைவிளாகம், விழுப்புரம் எக்கியர்குப்பம் ஆகிய இடங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இது ஒத்திகைப் பயிற்சி என்பதால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com