கோயில் காடுகள் அழிக்கப்படுவதால் குறைந்து வரும் மழைப்பொழிவு: பசுமைப்பரப்பை அதிகரிக்க சட்டம் தேவை!

தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் கோயில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் மழைப்பொழிவு ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
கோயில் காடுகள் அழிக்கப்படுவதால் குறைந்து வரும் மழைப்பொழிவு: பசுமைப்பரப்பை அதிகரிக்க சட்டம் தேவை!

மதுரை: தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் கோயில் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுவதால் மழைப்பொழிவு ஆண்டுக்காண்டு குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 வெள்ளைக் குதிரை, அதில் அருவாளோடு அமர்ந்திருக்கும் அய்யனார் அல்லது சாத்தனார் தெய்வங்களை, தமிழகத்திலுள்ள எந்த ஊருக்குச் சென்றாலும், நாம் இயல்பாகக் காண முடியும். கனல் தெறிக்கும் பார்வையில், நாக்கு வெளியே தெரிய, விழிகள் பிதுங்கி நிற்க, முறுக்கிக் கொண்டிருக்கும் மீசையோடு நின்று கொண்டிருக்கும் இந்த மண் சிலைகள், ஊரின் எல்லையில் நின்று வரவேற்றுக் கொண்டிருக்கும் அய்யனார் உள்ளிட்ட நாட்டார் தெய்வ மரபு, பழந்தமிழர் இயற்கை வழிபாட்டு முறையின் தொடர்ச்சியே. நாட்டார் தெய்வங்கள் உறைந்து நின்ற இடத்தைச் சுற்றியே கோயில் காடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
 தமிழ்நாட்டில், புதுச்சேரியில் அமைந்துள்ள கோயில் காடுகளின் பரப்பு மிகவும் சிறியது. சுமார் இரண்டு ஏக்கர் முதல் இருபது ஹெக்டேர் வரைக்கும் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்த அல்லது அதனை ஒட்டியுள்ள சிற்றூர்ப்புறங்களில் கோயில் காடுகளின் பரப்பளவு பல நூறு ஹெக்டேர் அளவுக்குப் பெரியதாகும். கோயில் காடுகளில் வளர்கின்ற தாவரங்கள் அனைத்தும் அந்தந்த மண்ணுக்கேற்றவை ஆகும். பல்வேறு வகையான உயிரினங்களுக்கு பாதுகாப்பு மண்டலமாக விளங்குகின்றன. வளமையான கட்டுப்பாடற்ற தாவர வளர்ச்சி நிலத்திற்குக் கீழ் இருக்கும் தண்ணீரை காப்பாற்றுகிறது. கடும் வெப்பமான கோடை மாதங்களில், இந்த காடுகளுக்குள் இருக்கும் புனித குளமே, குடிக்கும் தண்ணீருக்கான ஒரே ஆதாரமாக இருக்கிறது. பருவகால சூழ்நிலைக்கு ஏற்ப, இந்த காடுகளில் பலவிதமான தாவரங்கள் காணப்படுகின்றன. ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் தாவரங்கள், ஆண்டில் ஏதேனும் பருவத்தில் பசுமையாக இருக்கும் தாவரங்கள், இலையுதிர் மரங்கள், பால் நிலம் தாங்கும் மரங்கள், செடிகள் கொடிகள் ஆகியவை காணப்படுகின்றன. காய்ந்த நிலங்களில் இருக்கும் கோயில் காடுகளில் காயாம்பூ என்ற மரம் இயல்பாக வளர்கிறது. இது விறகுக்காக பயன்படுத்தப்படும்.
 தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும், இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஓரிடத்திலிருந்துதான் தங்கள் முன்னோர்கள், ஊரைப் பாதுகாக்கிறார்கள் என்ற மக்களின் நம்பிக்கையே இக்கோயில் காடுகளாகும். கோயில் காடுகளில் அப்பகுதியின் மண் சார்ந்த வேப்பமரம், நாகலிங்க மரம், வில்வமரம், அரச மரம் உள்ளிட்ட நாட்டு வகை மரங்கள் மட்டுமே இருக்கின்றன. எந்த ஒரு கோயில் காடுகளிலும் அயல் மரங்கள் இருப்பது இல்லை. மேலும் நாட்டு மரங்கள் மனிதர்களுக்கு பேருதவி புரிகின்றன. அதன் பொருட்டு இம்மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், அக்கறையோடும் கோயில் காடுகள் அப்பகுதி மக்களால் உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலமாவது இந்த கோயில் காடுகளுக்காக ஒதுக்கப்பட்டு அதில் அம்மன் சிலைகளும், அய்யனார், மதுரைவீரன் சிலைகளும் நிறுவப்பட்டு, மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் மற்ற விலங்குகளின் சிலைகளும் நிறுத்தப்படுகின்றன. அம்மன், அய்யனார், மண்ணால் செய்யப்பட்ட குதிரை இல்லாத ஒரு கோயில் காட்டைப் பார்ப்பது மிகவும் அரிது.
 அதிக மழைப்பொழிவாலும், வெள்ளப்பெருக்காலும் ஏற்படும் மண் அரிப்பு இக்கோயில் காடுகளால் மட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வனங்களில் உள்ள மரங்களின் இலை, பூ, காய், கிளைகள், விதைகள் ஆகியவை மண்ணில் பரவி, அச்சிற்றூரின் மண் வளம் தொடர்ந்து உயிர்ப்புடன் விளங்க பேருதவி புரிகிறது. பல்வேறு வகையான பறவைகள், விலங்குகளின் வாழிடமாகவும் திகழ்வதால், அங்கு பல்லுயிர்ச்சூழல் இயல்பாகவே பன்மடங்கு பெருகி வளர்கிறது. அத்துடன் அவ்வுயிரினங்களுக்குத் தேவையான உணவும் இங்கேயே கிடைக்கிறது. கோயில் காடுகளில் வாழும் பறவைகள், விலங்குகள் மூலம், அங்குள்ள மரங்களின் விதைகள் மேலும் பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. இதனால் அத்தாவரங்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரிக்கிறது. மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களின் இருப்பிடமாகவும் கோயில் காடுகள் திகழ்கின்றன. இந்தத் தாவரங்கள் காற்றிலுள்ள மாசுகளின் அளவை வெகுவாகக் குறைத்து, மக்கள் உயிர் வாழத் தேவையான பிராணவாயுவை அதிகளவில் வெளியிடுகின்றன. இதன்மூலம் கிராமங்களில் நீர், நிலம், காற்று, பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. காலங்காலமாய் மக்களிடமிருந்த மரபு வழியிலான நம்பிக்கை, இந்தக் காடுகளை அழிந்துவிடாமல் பாதுகாக்க உதவியது.
 இங்குள்ள மரங்களை வெட்டினால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயத்தினால் இன்றளவும் இக்காடுகள் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கின்றன. அண்மைக் காலங்களில் மக்களின் நம்பிக்கைக் குறைவு காரணமாக பல இடங்களில் கோயில் காடுகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
 இதுதொடர்பாக இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, இந்தியாவில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமே கோயில் காடுகள் என்ற இயற்கை அமைப்பு உண்டு. வேறு எந்த மாநிலங்களிலும் கோயில் காடுகள் என்ற அமைப்பு கிடையாது. தமிழர்களின் பழங்கால சிறு தெய்வ வழிபாட்டையொட்டி முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் கோயில் காடுகள். கோயில் காடுகளில்தான் வழிபாட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. தற்போதும் கூட கிராமங்களில் புரவியெடுப்பு உள்ளிட்ட விழாக்கள் இதை மையமாக வைத்தே நடத்தப்படுகின்றன. மேலும் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்டசுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு கோயில் காடுகள் மட்டுமே தீர்வாக அமையும். அதிக பரப்பில் கோயில் காடுகள் இருக்கும்பட்சத்தில் அப்பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். கோயில் காடுகள் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டும் உயர்ந்தே காணப்படும்.
 ஆனால் தற்போது, விவசாய நிலங்களின் அளவு அதிகரிப்பு, இயற்கை வளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுதல், மக்கள் தொகை அதிகரிப்பு, நகர்மயமாதலால் குடியிருப்புப் பகுதிகள் விரிவாக்கம், வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இந்தக் கோயில் காடுகள் அழிவைச் சந்தித்து வருகின்றன. தமிழகத்தில் ஏராளமான கோயில் காடுகள் அண்மைக்காலத்தில் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டுள்ளன. கோயில் காடுகள் அழிக்கப்படுவதால் பசுமைப்பரப்பு குறைவதோடு, மழைப்பொழிவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை நாம் எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். மேலும் கோயில் காடுகளைப் பாதுகாக்க தகுந்த சட்டங்கள் இல்லாததும் அவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம்.
 கோயில் காடுகள் என்பவை வெறும் நிலம் மட்டுமல்ல. அதனைச் சார்ந்து வாழும் மனிதர்களுக்கும், உயிர்களுக்கும், மரம், செடி, கொடி வகைகளுக்கும் மாபெரும் நம்பிக்கை. அங்கிருந்து பெயர்க்கப்படும் ஒவ்வொன்றும் வாழும் மக்களின், உயிர்களின் வாழ்வை சீர்குலைப்பதற்கு சமம். இயற்கையின் பன்முகச் சூழலை பாதுகாக்கும் முயற்சியில் கோயில் காடுகளுக்கும் முக்கியமான இடமுண்டு என்பதை உணர்ந்து, கோயில் காடுகளை பாதுக்கும் செயல்திட்டங்களை வகுக்கவேண்டும். அதன் ஒரு பகுதியாக கோயில் காடுகளை பாதுகாக்கும் சட்டத்தை இயற்றுவதோடு கோயில் காடுகளில் உள்ள நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும்.
 மேலும் தற்போது பிரபலமாகி வரும் ஜப்பானிய முறையிலான குறைந்த பரப்பில் அடர் வனம் உருவாக்கும் மியாவாக்கி முறை ஏறக்குறைய நம்முடைய கோயில் காடுகள் மரபைத் தழுவித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே மியாவாக்கி முறையிலான மரம் நடுதலை கோயில் காடுகளில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தலாம். சரியான செயல்திட்டங்களோடு நடவடிக்கையும் எடுக்கும்பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் கோயில் காடுகள் மூலம் மிகப்பெரிய பசுமை பரப்பை உருவாக்க முடியும். இதன் மூலம் தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிப்பதுடன் பசுமைத்தமிழகமாக மாறும். இதற்கு அரசும், மக்களும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றனர்.
 -ச.உமாமகேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com