தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம் 

தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்
தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை: முதல்வர் பழனிசாமி விளக்கம் 

தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை சேலம் அரசுப் பொருள்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் விளக்கமளித்துப் பேசியது: 2017-18-ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் மாநில நிதி நிலை மீதான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி பயன்பாடு குறித்து பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.
 அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிற விதமாக இருக்கிற காரணத்தினாலே இதை தெளிவுபடுத்துவது அரசினுடைய கடமையாகும். 2017-18 -ஆம் ஆண்டுக்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் மாநில நிதிநிலை மீதான அறிக்கையில் தமிழக அரசால் ஏறத்தாழ ரூ.3,600 கோடி அளவுக்கு வரப்பெற்ற மத்திய அரசின் மானியங்களைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளதாக சில பத்திரிகைகளில் ஒரு தவறான கருத்து வெளியாகியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் வரவு- செலவு மதிப்பீடு தயாரிக்கும்போது மத்திய அரசு திட்டங்களுக்கு எந்த அளவுக்கு மத்திய அரசு நிதி எதிர்பார்க்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் இத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த இயலும். இந்த ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து அந்த நிதியாண்டில் விடுவித்து வரப்பெறும் மானியங்களின் அடிப்படையில் திட்டப் பணிகளுக்கான விடுவிக்கப்படுகிறது.
 சில திட்டங்களுக்கான எதிர்பார்க்கப்படும் நிதி மத்திய அரசிடமிருந்து வரப்படவில்லை என்றால், மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அதற்காக செய்யப்படும் ஒதுக்கீட்டை அந்த ஆண்டு விடுவிக்காமல் அதை சேமிப்பாகக் கருதுகிறோம்.
 தொடர்ந்து அடுத்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதி வரப்பெறும்போது அந்தத் திட்டங்களுக்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. அந்தவகையில், மாநில அரசு மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பிக் கொடுத்துள்ளது என்று கூறுவது ஒரு தவறான கருத்தாகும்.
 2017-18 -ஆம் ஆண்டு 14 -ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ள அடிப்படை மானியத்துக்காக ரூ.1516.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஆனால், மத்திய அரசு அதற்கான முதல் தவணையான ரூ.758.06 கோடிதான் விடுவித்தது. எனவே, மாநில அரசால் இரண்டாவது தவணையான ரூ.758.06 கோடி விடுவிக்க இயலவில்லை. அந்தத் தொகை 2017-18-ஆம் ஆண்டு சேமிப்பாகக் கருதப்படுகிறது.
 2018-19-ஆம் ஆண்டில் மாநில அரசால் எடுக்கப்பட்டு முயற்சிகளினால் மத்திய அரசிடமிருந்து இந்த நிதியைப் பெற்று, மாநில அரசு ஊராட்சிகளுக்கு விடுவித்தது. பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2017-18-ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரவு- செலவுத் திட்ட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.
 ஆனால், மத்திய அரசிடமிருந்து 2017-18-ஆம் ஆண்டில் பெறப்பட்ட தொகை குறைந்துவிட்ட காரணத்தினால், மாநில அரசின் வரவு }செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை 2017-18-ஆம் ஆண்டு முறையாக விடுவிக்க இயலவில்லை. 2018-19-ஆம் ஆண்டு இந்தத் தொகை விடுவிக்கப்பட்டது.
 எனவே, இதுபோன்ற திட்டங்களுக்கு அதே நிதியாண்டில் மத்திய அரசின் நிதி பெறப்படவில்லை என்ற நிலையில் சேமிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டு மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்றவுடன் இந்தத் தொகைகளை மாநில அரசு விடுவித்து திட்டங்களை சீரான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, ஒருபோதும் மாநில அரசு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஒருநிலை ஏற்படவில்லை.
 திமுக ஆட்சி நடந்தபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் ஏற்பட்டிருந்தது. அதற்கான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும் விதமாக செய்தி வெளிவந்தது உண்மையல்ல. மத்திய அரசு அளித்த நிதி முழுவதையும் அரசு செலவழித்துக் கொண்டிருக்கின்றது.
 சில இனங்களில், அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் அந்த நிதி வராத காரணத்தினால் அடுத்த ஆண்டு அந்த நிதியைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com