போதிய பராமரிப்பின்றி 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பணியாளர்கள் தவிப்பு!

போதிய பராமரிப்பு இல்லாத 108 ஆம்புலன்ஸ் வாகனங்களால், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அழைத்துச் சென்று
போதிய பராமரிப்பின்றி 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பணியாளர்கள் தவிப்பு!

கோவை: போதிய பராமரிப்பு இல்லாத 108 ஆம்புலன்ஸ் வாகனங்களால், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
 மத்திய சுகாதாரத் துறை சார்பில் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இலவச 108 ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த 2008 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிர, கர்நாடகம், கேரளம் உள்பட 22 மாநிலங்களில் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் நோக்கத்தில் இலவச சேவையை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டம் அரசு நிதி உதவியுடன் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணியாளர்களை நியமித்தல், சம்பளம் வழங்குதல் உள்பட பணிகளை அனைத்தும் தனியார் நிறுவனமே மேற்கொள்கிறது.
 இந்த வாகனத்தில் அவசரகால உதவிக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், இ.சி.ஜி., மல்டி பாரா மீட்டர் உள்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர 50க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவ தொழில்நுட்ப அலுவலர், வாகன ஓட்டுநர் (பைலட்) ஆகியோர் பணியில் இருப்பர். கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், மருத்துவத் தொழில்நுட்ப அலுவலர்கள், ஓட்டுநர்கள் என மாநிலம் முழுவதிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 926 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. கோவை மாவட்டத்தில் 39 வாகனங்கள் உள்ளன. இவற்றில் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் 4 ஜீப் ஆம்புலன்ஸ்களும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு 2 வாகனங்களில் இன்குபேட்டர் வசதிகளும் உள்ளன. நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இருசக்கர ஆம்புலன்ஸுகளும் உள்ளன.
 இத்திட்டம் தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 3 லட்சத்து 42 ஆயிரத்து 820 நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களால் பயனடைந்துள்ளனர். இதில் விபத்துகளால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரும், கர்ப்பிணிகள் 65 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு, மைலேஜ் கொடுக்கச் சொல்லி ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 10 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்கள் உரிய பராமரிப்பில்லாமல் காணப்படுவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனமும் வாகனங்கள் பராமரிப்பில் அக்கறை கொள்வதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ் வாகன தொழிலாளர்கள்
 முன்னேற்ற சங்க கோவை மாவட்டத் தலைவர் எம்.குணா கூறியதாவது: 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு நிதி உதவியுடன் ஜி.வி.கே. அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. நகர்ப் பகுதிகளில் 5 கி.மீ.க்கு ஒரு வாகனமும், ஊரகப் பகுதிகளில் 10 முதல் 15 கி.மீ.க்கு ஒரு வாகனமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் 108 ஆம்புலன்ஸுகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு 10 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 60 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனத்தை இயக்க முடியவில்லை. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டுச் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. நேரத்துக்குச் செல்ல முடியாததால் ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில நேரங்களில் தாக்கவும் செய்கின்றனர்.அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாததற்கு நிறுவனத்திடமும் விளக்கம் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 50 சதவீத வாகனங்கள் போதிய பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. சில வாகனங்களில் ஒரே நேரத்தில் 2 கியர்கள் விழுகின்றன. இதனால், விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. வாகனத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான வாகனங்கள் 3 முதல் 4 லட்சம் கி.மீ.க்கு மேல் இயக்கப்பட்டுள்ளன.
 சில வாகனங்கள் இயக்குவதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ளன. இந்த வாகனங்களால் பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. உரிய பராமரிப்பு இல்லாததால் வாகனங்களை இயக்கும்போது அதிக அளவில் புகை வெளியேறுகிறது. இதனால் அவர்கள் கேட்கும் மைலேஜ் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 இதற்கான விளக்கம் அளித்தாலும் ஏற்பதில்லை. மேலும், வாகனங்களின் நிலை குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாகப் பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றுகின்றனர். அதேபோல் விடுமுறையும் அளிப்பதில்லை. தவிர பணி நேரத்தையும் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றியுள்ளனர். 12 மணி நேர வேலையால் உரிய ஓய்வு கிடைப்பதில்லை. எனவே பணி நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் அல்லது 24 மணி நேரத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். வாகனங்கள் குறித்த புகார் தெரிவித்தாலும், விடுமுறை கேட்டாலும் தரக்குறைவாக நடத்துகின்றனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 -ம.முனுசாமி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com