கலைமாமணி விருது வழங்கும் விழா:  தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழக சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற உள்ள கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
கலைமாமணி விருது வழங்கும் விழா:  தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழக சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற உள்ள கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த நாகசுர கலைஞர் மாரியப்பன் தாக்கல் செய்த மனு: தமிழக அரசால் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் இயல், இசை, நாடக மன்றம் உருவாக்கப்பட்டது. 

இயல், இசை, நாடகம், கதா காலட்சேபம் உள்ளிட்ட கலைகளை மேம்படுத்துவதே இந்த மன்றத்தின் நோக்கம். 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால்,  2015-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் வெளியிட்ட அரசாணையில் தேர்தல் முறை மாற்றப்பட்டு 22 பேர் நியமனம் செய்யப்பட்டனர். 

இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்   பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.  இறுதியாக, நியமனம் செய்யப்பட்ட 22 பேரும் எந்தவித கொள்கை முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர்கள், கலைமாமணி விருதுக்கு 201 பேரை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது சட்டவிரோதமானது. 

விருதுக்கு தேர்வு செய்வதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை.

எனவே,  கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மரக்கால் குதிரையாட்டம் என்ற கலைக்கு, அந்த துறையைச் சாராத கோவிந்தராஜ் என்பவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இது முறைகேடானது, கோவிந்தராஜூக்கு விருது வழங்க தடைவிதிக்க வேண்டும். மேலும், ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பே விசாரித்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, "ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறும் கலைமாமணி விருது வழங்கும் விழாவிற்கு எந்த தடையும் இல்லை. 

மரக்கால் குதிரை ஆட்டத்திற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கோவிந்தராஜ், அந்த துறையைச் சார்ந்தவர் இல்லை என்பதால், அவருக்கு கலைமாமணி விருது வழங்க தடை விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விருதுக்கான தேர்வு முடிக்கப்படவேண்டும் என 1995-ஆம் ஆண்டே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, வரும் காலங்களில் ஜூன் மாத இறுதிக்குள் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், அனைத்து கலைஞர்களிடமும் விண்ணப்பம் பெற்று வெளிப்படையாக விருதுக்கான தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com