வேலூர் மக்களவைத் தேர்தல்: 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டி.எம்.கதிர்ஆனந்துக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம். உடன், திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார்
டி.எம்.கதிர்ஆனந்துக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம். உடன், திமுக பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

கட்டுக்கடங்காத பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட  அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி உள்பட மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலின்போது தொகுதியில் மொத்தமுள்ள 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 வாக்காளர்களில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 352 பேர்  வாக்குப்பதிவு செய்திருந்தனர். இதுதவிர, 673 தபால் வாக்குகளும், 2,385 மின்னணு தபால் வாக்குகளும் பதிவாகியிருந்தன. 

இந்த வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில், ஏ.சி.சண்முகம் (அதிமுக கூட்டணி) 363 வாக்குகளும், கதிர்ஆனந்த் (திமுக) 200 வாக்குகளும், தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) 17 வாக்குகளும், மின்னணு தபால் வாக்குகளில் ஏ.சி.சண்முகம் 146 வாக்குகளும், கதிர்ஆனந்த் 160 வாக்குகளும், தீபலட்சுமி 66 வாக்குகளும் பெற்றிருந்தனர். 

அதேசமயம், பேரவைத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, வேலூர், ஆம்பூர்  தொகுதிகளுக்கு தலா 18 சுற்றுகளும், அணைக்கட்டு, கே.வி.குப்பம், வாணியம்பாடி தொகுதிகளுக்கு தலா 19  சுற்றுகளும், குடியாத்தம் தொகுதிக்கு 21 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் 6 சுற்றுகள் வரை அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், திடீர் திருப்பமாக 7-ஆவது சுற்றிலிருந்து திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் முன்னிலை பெற்றார். அதன்பிறகு அனைத்துச் சுற்றுகளிலும் திமுக வேட்பாளரே முன்னிலையில் இருந்தார். 

21 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இறுதி நிலவரப்படி (தபால் வாக்குகள் உள்பட) திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வெற்றிச் சான்றிதழை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் வழங்கினார்.  

பேரவைத் தொகுதி வாரியாக கணக்கிடுகையில், கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய தொகுதிகள் அதிமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்திருப்பதும், இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினர் அதிக அளவில் உள்ள வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதும் தேர்தல் முடிவு மூலம் தெரியவந்துள்ளது.

நோட்டா பெற்ற வாக்குகள்: இத்தொகுதியில் நோட்டாவுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் 9,398, தபால் வாக்குகள் மூலம் 5, மின்னணு தபால் வாக்குகள் மூலம் 14 என மொத்தம் 9,417 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்தலில் போட்டியிட்ட ஜி.எஸ்.கணேஷ் யாதவ் (பிரகதிஷில் சமாஜவாதிக் கட்சி)-2,480, வி.சேகர் (அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி)-476, ச.திவ்யா (தேசிய மக்கள் கழகம்)-719, ரா.நரேஷ்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)-3,123, பேராயர் காட்ஃப்ரே நோபுள் (தேசிய மக்கள் சக்தி கட்சி)-708, மோகனம் (மறுமலர்ச்சி ஜனதா கட்சி)-265 , அ.விஜய் பவுல்ராஜா (குடியரசு சேனை)-901 வாக்குகள் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களான அக்னி ஸ்ரீராமச்சந்திரன்-1,166, பொ.ஆறுமுகம்-540, கே.கதிரவன்-387 , எம்.கதிரவன்-621, இ.கருணாநிதி-1,526, ச.சண்முகம்-3,071 , கே.சுகுமார்-4,446, பொ.செல்லபாண்டியன்-2,591, வி.செல்வராஜ்-595, டி.டேவிட்-244, சு.தமிழ்ச்செல்வன்-211, ஏ.நூர்முகமது-228 , மருத்துவர் கே.பத்மராஜன்-185 , மா.பலராமன்-230, முரளி-195,  பி.ரஷீத் அகமது-1,138, எம்.ஆர்.வெங்கடேசன்-300 , ஜே.எஸ்.கே.-758 வாக்குகள் பெற்றுள்ளனர்.

அதிமுக வாக்குகள் சிதறவில்லை. கட்சியின் செல்வாக்கை உணர்த்தும் தேர்தலாக வேலூர் தேர்தல் முடிவு  அமைந்திருக்கிறது.

எடப்பாடி கே.பழனிசாமி, 
ஓ.பன்னீர்செல்வம்


திமுகவின் வெற்றிப் பயணத்தை வேலூர் தேர்தல் மீண்டும் ஒருமுறை உறுதி
செய்துள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி.

மு.க. ஸ்டாலின் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com