ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை  வெள்ளிக்கிழமை சந்தித்து   முதல்வரின் கடிதத்தை  வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை  வெள்ளிக்கிழமை சந்தித்து   முதல்வரின் கடிதத்தை  வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,

தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீசைலம் அணையில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் உத்தரவை அடுத்து ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி தமிழகத்துக்கு தர வேண்டும். ஒப்பந்தப்படி ஜூலை முதல் நவம்பர் வரை 8 டிஎம்சி நீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீரும் தர வேண்டும். ஆனால், ஒப்பந்தப்படி ஆந்திரம் முழுமையாக நீர் தந்ததில்லை. கடந்தாண்டு கூட 12 டிஎம்சிக்கு 1.94 டிஎம்சி மட்டுமே தந்தது. 

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து முதல் தவணை காலம் தொடங்கியது. இந்தத் தவணை காலத்தில் 8 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு ஆந்திர அரசு தர வேண்டும். தற்போது சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஒப்பந்தப்படி தண்ணீர் தரும் பட்சத்தில் சென்னை குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும்.  அதேவேளையில் ஆந்திர அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்த காலங்களில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வலியுறுத்தியும், பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணையைக் கைவிட வலியுறுத்தியும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை விஜயவாடாவில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். 

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அமைச்சர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது:  

சென்னையின் குடிநீருக்காகத் தர வேண்டிய கிருஷ்ணா நீரைப் பெற நானும் (அமைச்சர் வேலுமணி), அமைச்சர் ஜெயக்குமாரும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முதல்வரின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தோம். 

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசைலத்துக்கு நீர்வரத்து நல்ல முறையில் உள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் இருந்து நமக்குத் தர வேண்டிய நீர் இருப்பு சரியாக உள்ளது. அந்த மாநிலம் நீரைத் தருவதற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. 

எனவே, அது தொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கோரிக்கை வைத்தோம்.  அவரும் மனமுவந்து தண்ணீரைத் தருவதற்கு ஒப்புக் கொண்டார். 

ஸ்ரீசைலத்தில் இருந்து சோமசீலாவுக்கு வரும் நீரானது கண்டலேறு மூலமாக நமக்குக் கிடைக்கும். இந்தத் தண்ணீரைத் தர அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் பழனிசாமி எடுத்த வேகமான நடவடிக்கையைத் தொடர்ந்து, தண்ணீரைத் தர ஆந்திர முதல்வரும் ஒப்புக் கொண்டார். இந்த நடவடிக்கையால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். இதற்காக முதல்வர் சார்பில் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீசைலத்துக்கு இப்போது 2.97 டிஎம்சி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்துக்குள் தமிழகத்துக்கு 8 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும். அந்தத் தண்ணீர் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார் அமைச்சர் வேலுமணி. 

8 மாதங்களுக்கு மேல்... சென்னைக்கு மூன்று மாதங்களில் 8 டிஎம்சி கிடைத்தால் அதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடு பெரும்பாலும் குறையும். மாதத்துக்கு 0.85 டிஎம்சி வீதம் பயன்படுத்தினாலும் 8 முதல் 10 மாதங்கள் வரை சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும். மேலும் தற்போது சென்னைக்கு தினமும் வழங்கப்பட்டு வரும் 55 கோடி லிட்டர் தண்ணீர் 65 கோடி லிட்டராக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com