சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சௌந்தரபாண்டியனார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஊ.பு.அ. சௌந்தரபாண்டியனாரின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்ட அவரது  பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பட்டிவீரன்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரபாண்டியனார் தமது சமுதாயப் பணிகளால் அந்த கிராமத்திற்கு சுயமரியாதை மண் என்று பெயர் வாங்கிக் கொடுத்தவர். 1921-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையில் தமது 27-ஆவது வயதிலேயே உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தமது வாழ்நாளில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகவும் பாடுபட்டவர். இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த போது, பெண்கல்விக்கு  அதிலும் மருத்துவம் படிப்பதற்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்தார். பேருந்து பயணச்சீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்ற மறுக்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அச்சிட்டு சமூக நீதியை நிலைநாட்டியவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விதவைத் திருமணத்திற்கு ஆதரவாக பல்வேறு  புரட்சிகளைச் செய்தவர். காப்பி விவசாயிகளுக்கான விற்பனை மையங்களை ஏற்படுத்தியவர்.

உழவர்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்த அவர், அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். உழவர்கள் நலனுக்காக தென்னிந்தியாவின் முதல் சர்க்கரை ஆலையை மதுரை அருகிலுள்ள பாண்டியராஜபுரம் பகுதியில் நிறுவியவர். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வகை செய்தவர். வெள்ளையர் விதித்த தண்டவரியை நீக்கச் செய்ததுடன், பொது இடங்களில் அனைவரும் சம உரிமையுடன் நடமாட வகை செய்யும் ஸ்தல ஸ்தாபனச் சட்டத்தைக் கொண்டு வந்தவர். கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்டிக் கடை வைக்க  நிதிஉதவி செய்ததன் மூலம், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கள் விற்பனையை ஒழித்துக் கட்டிய பெருமை அவருக்கு உண்டு.

சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட சௌந்தரபாண்டியனார், தந்தைப் பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1927-ஆம் ஆண்டு இவரது தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தான் பெயருக்கு பின்னால் சாதியின் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கத்தை கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது. தமிழர்கள் மானம், மரியாதை, பகுத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி அதற்கு வழிவகுத்தவர்.

பள்ளிகளிலும், பேருந்துகளிலும் ஆதி திராவிடர்களை சேர்த்துக் கொள்ள மறுத்தவர்களுக்கு உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கை எடுத்து, சமூக நீதியை நிலை நிறுத்தினார். பலநேரங்களில் அரசு செய்யவேண்டிய பணிகளை தனிஆளாக நின்று செய்து முடித்தார். ஆயுள் காப்பு கழக நிறுவனம் தொடங்குதல், விவசாயத்தை தொழிலோடு இணைக்கும் முயற்சியாக கரும்பு விவசாயிகளை இணைத்து சர்க்கரை ஆலை தொடங்குதல் உள்ளிட்ட சாதனைகளை படைத்தவர் தான் சௌந்தரபாண்டியனார்.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகவே சமூக நீதி, சுயமரியாதை, உழவர்கள் நலன், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக பாடுபட்ட சௌந்தரபாண்டியனாரின் சிறப்புகளையும், பெருமைகளையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15&ஆம் தேதிசௌந்தரபாண்டியனாரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com