பள்ளிகளில் வேளாண்மையை பாடமாக வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேளாண்மையை ஒரு பாடமாக  வைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் வேளாண்மையை பாடமாக வைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேளாண்மையை ஒரு பாடமாக  வைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தொழிற்படிப்புகளில் மருத்துவம், பொறியியல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்வது விவசாயம். உயர்கல்வியில் முதன்மைப் படிப்பாக இருக்கும் விவசாயம், பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை என்பது தான் மிகவும் முரணான விஷயமாகும். மேல்நிலைக் கல்வியில் சுமார் 200 பள்ளிகளில் மட்டும் வேளாண்மை ஒரு பாடமாக இருக்கிறது. 
ஆனால், தொடக்கக் கல்வியிலோ, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளிலோ  விவசாயம் ஒரு பாடமாக்கப்படவில்லை. 
இது தொடர்பாக அதிமுக, திமுக ஆட்சியிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது நடைமுறைக்கு வராமலேயே போய்விட்டது.
வேளாண்மை என்பது இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முதன்மை விருப்பமாக உள்ளது. விவசாயத்தை உயர்கல்வி வாய்ப்பாகவும், தொழிலாகவும் பார்க்கும் மாணவர்களை விட, விவசாயத்தை தங்கள் வாழ்க்கையின் அங்கமாக கருதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இப்போதே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் ஆசிரியர்  மற்றும் மாணவர்களின் சொந்த விருப்பத்தில் இயற்கை விவசாயம், பல்வேறு வகை கீரைகள் சாகுபடி போன்றவை நடைபெற்று வருகின்றன. இத்தகைய தருணத்தில் தமிழக பள்ளிகளில் விவசாயத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவது மாணவர்களிடையே விவசாயம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்.
எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை வேளாண்மையை ஓர் பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். வேளாண்மை பாடத்தை நடத்துவதற்காக சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் 
வேளாண்மை குறித்த அடிப்படைகளை மாணவர்களுக்கு கற்றுத் தருவதுடன், வேளாண் சிறப்பாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com