காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆறுகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது: 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் ஆறுகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆறுகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது: 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்


காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் ஆறுகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீர் திறப்பு தொடர்பாக அவ்வப்போது மக்களுக்கு விரிவான தகவல்களை ஊடகங்கள் மூலமாக அளிக்க வேண்டுமெனவும் 12 மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:-
     கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகளவு 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, நீர் திறப்பின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கர்நாடக அணைகளில் இருந்து மேலும் சில நாள்களுக்கு நீர் திறப்பு அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீர் திறப்பு குறித்து அவ்வப்போது மக்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
காவிரி படுகையில் இருந்தும், அது சார்ந்த இதர நீர்நிலைகள் வழியாகவும் தண்ணீரைத் திறந்து விடும் போது உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நீந்தவோ அல்லது குளிக்கவோ கூடாது. மேலும், மீன்பிடிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 
செல்பி வேண்டாம்: மிகவும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு செல்பி புகைப்படங்களை எடுக்கக் கூடாது. நதிகள், நீர்நிலைகள், அணைக்கட்டுகள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் செல்வதை அவர்களது பெற்றோர்கள் தடுக்க வேண்டும். 
பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக குழந்தைகளுக்கு அறிவுறுத்தல்களை அளிக்க வேண்டும். நீர் திறந்து விடப்படும் காலங்களில் நீர்வரத்து வழியாக வனவிலங்குகளை கொண்டு செல்வதில் விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நீர்வரத்து, நீர் இருப்பு தொடர்பான தகவல்களை மக்களிடையே கொண்டு செல்வதில் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும். பாலங்களைத் தவிர்த்து இதர நீர் வழிப் பாதைகள் குறித்து அடையாளம் கண்டு அதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம், பவானி, அமராவதி போன்ற ஆற்றுப் படுகைகளின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாநில பேரிடர் மீட்புப் படைக் குழு, பேரிடர் காவலர்கள் உள்ளிட்டோர் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். 
கால்நடைகளைப் பாதுகாக்கவும், முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், பாம்புகளை பிடிக்கவும், நடமாடும் குழுக்களை அமைத்திட வேண்டும். முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்திட வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குடிநீர் விநியோகம் செய்யப்படும் இடங்களில் உரிய முறையில் குளோரினைத் தெளிக்க அதற்கான குழுக்களை அமைத்திட வேண்டும். மின்பகிர்மான தடங்கள், மின்கம்பங்கள் ஆகியன பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். நிலைமையை மின்வாரிய அலுவலர்கள் உன்னிப்பாக கண்காணித்திட வேண்டும்.
காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்தவித அச்சமும், பயமும் கொள்ளாமல் இருக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். 
இதுகுறித்த அறிக்கைகளை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் கே.சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com