ரசாயனத் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி வட மாநிலத் தொழிலாளி பலி: தொழிற்சாலைக்கு சீல்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அத்தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.


ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கியதில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அத்தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் அக்ராவரம் மலைமேடு பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிந்து வந்த பிகார் மாநிலம் ஒளரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி சிக்கந்தர் (27), ராணிப்பேட்டை அருகே பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்த ராஜா (38), சத்திரம்புதூரைச் சேர்ந்த உதயகுமார் (48), வாணாபாடியைச் சேர்ந்த மாரிமுத்து, ராமன் (40) ஆகியோர் திங்கள்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள ரசாயனக் குழாயில் இருந்து திடீரென விஷ வாயு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சிக்கந்தர் மயங்கி விழுந்தார். அவரை மீட்க முயன்ற ராஜா, உதயகுமார், மாரிமுத்து, ராமன் ஆகியோரும் மயங்கினர். 
இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிக்கந்தர் உயிரிழந்தார். 
ராஜா, உதயகுமார், மாரிமுத்து, ராமன் ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து ராணிப்பேட்டை  சார்-ஆட்சியர் க.இளம்பகவத், வட்டாட்சியர் வை.பூமா, மாவட்டத் தொழிலகப் பாதுகாப்பு உதவி இயக்குநர் உமா பாரதி, வருவாய் ஆய்வாளர் விஜயசேகர் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை அங்கு சென்று தொழிற்சாலை ஊழியர்களிடம்  விசாரணை  நடத்தினார்.
அப்போது, தொழிலகப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காமலும், ஆபத்தான ரசாயன விஷ வாயு பயன்படுத்தும் நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு சாதனங்கள் வழங்காமலும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மாவட்ட தடயவியல் அலுவலர் விஜய் தலைமையிலான குழுவினர் விஷ  வாயு  கசிந்த ரசாயன மாதிரிகளை சேகரித்தனர். இதையடுத்து தொழிற்சாலைக்கு உடனடியாக சீல் வைக்க சார்-ஆட்சியர் க.இளம்பகவத் உத்தவிட்டார். 
அதன்பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி (பொறுப்பு) புகழேந்தி முன்னிலையில் வருவாய்த் துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட  எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வாலாஜாபேட்டை வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாஸ்கர் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் சார்-ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
உயிரிழந்த சிக்கந்தரின் சடலத்தை பிகார் மாநிலத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தித் தர சார்-ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com