கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடி யேற்றுகிறார் முதல்வர்

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றவுள்ளார் முதல்வர் கே.பழனிசாமி
கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடி யேற்றுகிறார் முதல்வர்


நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றவுள்ளார் முதல்வர் கே.பழனிசாமி. இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகளை அவர் வழங்கவுள்ளார்.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல் துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரவுள்ளனர். கோட்டை கொத்தளத்தின் முன் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்வர் வந்து இறங்குவார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்பார்.
தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டலக் கடலோரக் காவல்படை ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.
பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்வரை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். 
அங்கிருந்தபடி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸாரின் அணிவகுப்பை பார்வையிடுவார். காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்வர் சென்று, அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். 
பின்னர் சுதந்திர தின உரையை முதல்வர் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்குவார். இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.

நெல்லை வீரத் தம்பதிக்கு விருது...
தங்களது வீட்டில் நடைபெற இருந்த கொலை-கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்திய நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த தம்பதிக்கு வீர தீரச் செயலுக்கான விருதினை சுதந்திர தினவிழாவின்போது முதல்வர் கே.பழனிசாமி வழங்குகிறார்.
இதற்காக அவர்கள் புதன்கிழமை பிற்பகலில் சென்னை வந்தனர். நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதியினர் தங்களது இல்லத்துக்கு அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஓட ஓட விரட்டினர்.
இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக ஊடகங்கள் உள்பட அனைத்திலும் வேகமாகப் பரவியது. துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டிய அந்தத் தம்பதிக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின்போதே விருது வழங்க முடிவு செய்தது. அதன்படி, சண்முகவேலு - செந்தாமரை தம்பதியினர் புதன்கிழமை பிற்பகல் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விருதுக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை கூடுதல் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் மேற்கொண்டார். சுதந்திர தின விழாவுக்கான விருதாளர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்ட நிலையிலும், சிறப்பு நிகழ்வாக வீரத் தம்பதிக்கு வீர தீர செயலுக்கான விருது வியாழக்கிழமை வழங்கப்பட உள்ளது.

சென்னை பெருநகர காவல் துறைக்கு கௌரவம்...
முதல்வரின் நல்ஆளுமை விருதானது சென்னை பெருநகர காவல் துறைக்கு அளிக்கப்பட உள்ளது. குற்றங்களைத் தடுக்கும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியது, பழைய குற்றவாளிகளை அடையாளம் காணும் ஆள் அறியும் மென்பொருளை உருவாக்கிச் செயல்படுத்தியது போன்ற பணிகளைப் பாராட்டும் வகையில் முதல்வரின் நல்ஆளுமை விருது அளிக்கப்பட உள்ளது.
இதேபோன்று, வேலூர் மாவட்டப் பகுதியில் நாகநதியை மீட்டெடுத்து புனரமைக்கும் பணியை நூறு நாள் வேலைத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கும், சரக்கு மற்றும் சேவை வரிகள் தொடர்பாக தனி செயலியை உருவாக்கியதுடன், 24 மணி நேரமும் தகவல்களைப் பெறும் வசதியை ஏற்படுத்தியதற்காக வணிகவரிகள் துறைக்கும் முதல்வரின் நல்ஆளுமை விருது அளிக்கப்பட உள்ளது. இதற்கான அரசு உத்தரவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com