அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு

அத்திவரதர் பெருவிழாவின் 47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 
அத்திவரதர் பெருவிழா: நாளை மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவு


அத்திவரதர் பெருவிழாவின் 47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழாவின் 45 -ஆவது நாளான புதன்கிழமை பெருமாள் பழங்களால் செய்யப்பட்ட மலர்க்கிரீடமும், ரோஜா நிறப் பட்டாடை, ஊதா நிற அங்கவஸ்திரம் அணிந்து, புஷ்பஅங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 
பெருமாளுக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட அத்திப்பழ மாலை, மகிழம்பூ மாலைகள் அணிந்திருந்தார். பட்டாச்சாரியர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது.  
பெருமாளைக் காண வந்த முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் கோயில் பட்டாச்சாரியார்கள் நெய் தீபம் காட்டினர். பின்னர் அவர்களுக்கு அத்திவரதரின் திருவுருவப் படமும், கோயில் பிரசாதமும் வழங்கினார்கள். 
அத்திவரதரை தரிசித்த  நடிகர் ரஜினிகாந்த்: அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கிட்டு பட்டாச்சாரியார் ரஜினிகாந்திடம் அத்திவரதரின் வரலாறை சுருக்கமாக விளக்கினார். கோயில் பட்டாச்சாரியார்கள் ரஜினிகாந்துக்கு மாலைகளும், சால்வையும் அணிவித்து அத்திவரதர் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும் வழங்கினார்கள்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் பிரதமர் தேவெகௌடா,  கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி குடும்பத்தினர்,  செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ.  கே.எஸ்.மஸ்தான், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் அத்திவரதரை புதன்கிழமை தரிசனம் செய்தனர்.
முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 12 மணி நேரம், பொதுதரிசனப் பாதையில் 6 மணி நேரம்: அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் கூட்டம் புதன்கிழமை கணிசமாக குறைந்திருந்தது. முக்கியஸ்தர்கள் வரிசையில் கடந்த சில நாள்களைப் போல பிரச்னைகள் ஏதுமில்லாமல் ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டனர். 
இருப்பினும் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. அத்திவரதரை பொது தரிசனப் பாதையில் வந்தவர்கள் 6 மணி நேரத்தில் தரிசிக்க முடிந்தது. வி.ஐ.பி. வரிசையில் வந்தவர்கள் 12 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். வி.வி.ஐ.பி. வரிசையில் வந்தவர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

3.50 லட்சம் பேர் தரிசனம்: அத்திவரதர் பெருவிழாவின் 45-ஆவது நாளான புதன்கிழமை சுமார் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

காவிரிப் பிரச்னைக்கு அத்திவரதர் அருளால் தீர்வு கிடைக்கும்
அத்திவரதரை தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்த பின்னர் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
அத்திவரதர் பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சிறப்பாக செய்திருப்பது பாராட்டுக்குரியது. இவ்விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என முன்கூட்டியே தமிழக அரசு அதிகாரிகள் கணித்து விழாவை சிறப்பாக நடத்தியிருக்கின்றனர்.  தமிழகத்திலும், கர்நாடகத்திலும், கேரளாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அத்திவரதர் அருளால் காவிரிப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று குமாரசாமி தெரிவித்தார்.

அத்திவரதரை தரிசிக்க வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்
வேலூர் மாவட்டம் பாணாவரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமாரின் மனைவி விமலா(25). நிறைமாத கர்ப்பிணியான இவர் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார். தரிசனம் முடித்து கோயிலுக்கு வெளியில் வரும் போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் கோயில் வளாகம் அருகே  இருந்த  மருத்துவ முகாமுக்கு  அழைத்து வரப்பட்டு அங்கு 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் கௌதம் , செவிலியர் யோகவள்ளி ஆகியோரின் உதவியுடன் சுகப்பிரசவத்தில் விமலாவுக்கு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்திவரதரை தரிசிக்க வந்த தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதால் குழந்தைக்கு அத்திவரதா எனப் பெயரிடுவோம் என விமலா தெரிவித்தார்.

ஆடி மாத கருட சேவை: இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆடி மாத கருட சேவையை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது: 
ஆடிமாத கருட சேவையன்று தரிசன நேரம் குறைக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தபடி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com