மழை வெள்ளம் - நிலச்சரிவு பாதிப்பு: நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி நிதி

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
மழை வெள்ளம் - நிலச்சரிவு பாதிப்பு: நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி நிதி


மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பெய்த பலத்த மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே, வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால் உள்ளிட்டோர் நீலகிரிக்குச் சென்று மீட்புப் பணிகளை வேகப்படுத்தினர். மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அந்த மாவட்டத்துக்கு எத்தகைய நிவாரணங்களை அளிப்பது என்பது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து முதல்வர் வெளியிட்ட உத்தரவுகள்:
பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 910 பேர் மீட்கப்பட்டு 67 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையாக உணவு வழங்குவதை உறுதி செய்யவேண்டும். குழந்தைகள், தாய்மார்களுக்கு பால் பவுடர் அளிக்க வேண்டும். வயது முதிர்ந்தோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும். 
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி, குளோரின் தெளிக்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப நிரந்தர மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்: மழை வெள்ளத்தால் பகுதியாக சேதம் அடைந்த 1,225 குடிசைகளுக்கு தலா ரூ.4,100-ம், முழுமையாக சேதமடைந்த 296 குடிசைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடியாக வழங்கப்படும். முழுமையாகச் சேதம் அடைந்த வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடுகள் திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
சேதமடைந்த தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்புப் பணியை வரும் 16-ஆம் தேதிக்குள் முடித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சேதம் அடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாகச் சீரமைக்க தேவைப்படும் நிதி தொடர்பான முன்மொழிவுகளை விரைந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு உடனடி நிவாரணத்துக்காக ரூ.30 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன்  என்று முதல்வர் பழனிசாமி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com