இதயம் - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: ஆஸ்திரேலியாவுடன் மியாட் மருத்துவமனை ஒப்பந்தம்

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் அதி நவீன முறைகளை நடைமுறைபடுத்துவதற்காக ஆஸ்திரேலியாவின் ஆல்பிஃரெட் மருத்துவமனையுடன் சென்னை மியாட் மருத்துவமனை புரிந்துணர்வு


இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் அதி நவீன முறைகளை நடைமுறைபடுத்துவதற்காக ஆஸ்திரேலியாவின் ஆல்பிஃரெட் மருத்துவமனையுடன் சென்னை மியாட் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட நுரையீரலை இரு பயனாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் இடம்பெற்றுள்ளது.
அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் மியாட் மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மேலாண் இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ், மருத்துவர்கள் மணிமாறன், பிரகாஷ் கே.லுதானி, விஜித் கே. செரியன், ஆல்ஃபிரெட் மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை திட்ட இயக்குநர் குமுத் திடால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது:
உலக அளவில் இதய செயலிழப்பு, மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால்தான் அதிக அளவில் உயிரிழப்பு நேரிடுகின்றன. இதயம் மற்றும் நுரையீரல் நலனுக்காக பல்வேறு நவீன சிகிச்சைகள் வந்துவிட்ட போதிலும், சில நேரங்களில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
இந்தியாவில் அவ்வாறு உறுப்புகளை தானமாகப் பெற காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேலும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தற்போது ஆஸ்திரேலிய மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை வழக்கமான காலத்தைக் காட்டிலும் கூடுதலாக உயிர்ப்புடன் பாதுகாத்து வைத்திருப்பது, அதிக பயனாளிகளுக்கு அவற்றை பொருத்துவது, ஒரு நுரையீரலை இரு பயனாளிகளிக்கு பொருத்துவது உள்ளிட்ட விஷயங்களும், தொழில்நுட்பங்களும் அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com