கக்குவான் தடுப்பூசிகள் பலனளிப்பதில்லையா?: ஆய்வுக்குட்படுத்தப்படும் 500 ரத்த மாதிரிகள்

கக்குவான் இருமல் பாதிப்பு மீண்டும் உலக அளவில் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகளும், மருந்துகளும் உரிய பலனளிக்காததே அதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


கக்குவான் இருமல் பாதிப்பு மீண்டும் உலக அளவில் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிகளும், மருந்துகளும் உரிய பலனளிக்காததே அதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அதுகுறித்த ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பொருட்டு  வேலூர் சிஎம்சி மருத்துவமனை, செயின்ட் ஜான் மருத்துவக் கல்லூரி, காஞ்சி காமகோடி மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட தாய், சேயின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர்.
பெர்ட்டசிஸ் எனப்படும் கக்குவான் இருமல் பாக்டீரியா தொற்று மூலம் பரவக் கூடிய நோயாகும். இருமல், தும்மல், காற்று மூலமாக குழந்தைகளிடையே பரவும் அந்நோய் நுரையீரலைப் பாதிக்கக் கூடியது.
அதனைத் தடுக்க கர்ப்ப காலத்திலேயே தாய்க்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. பிரசவத்துக்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதன் காரணமாக கக்குவான் இருமல் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், அண்மைக் காலமாக 9 வயதுக்குப் பிறகு குழந்தைகளின் உடலில் உள்ள தடுப்பு மருந்தின் வீரியம் மெல்ல மெல்ல குறையத் தொடங்குவதாகத் தெரிகிறது. அதன் பின்னர் குழந்தைகளுக்கு கக்குவான் பாதிப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, 500 தாய்மார்களின் ரத்த மாதிரிகளும், அவர்களது குழந்தைகளின் தொப்புள் கொடி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, தற்போது உள்ள எதிர்ப்பு மருந்துகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதிகள் அவர்களது உடலில் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் அதற்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, எதிர்ப்பு மருந்துகளை உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பூஸ்டர்கள் எனப்படும் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com