நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழு
நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 11, 12 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றபோது, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் -  மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்தும் தமிழக முதலமைச்சருக்கும் - தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் எழுதிய கடிதத்தினை, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர். 

அந்த கடிதத்தில், கனமழையினால், நீலகிரி மாவட்டமே நிலைகுலைந்து போயிருப்பதையும், அதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் அனுபவிக்கும் துயரத்தையும்,பிரதான எதிர்க்கட்சித்  தலைவர் என்ற முறையில் நான் அம்மாவட்டத்தில் இரு தினங்கள் நேரில் பார்வையிட்ட போது கண்டு மிகுந்த மன வேதனையுற்றேன். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பன்டலூர் ஆகிய வட்டங்கள்  மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கூடலூர் சட்டமன்ற தொகுதியே காணாமல் போய் விடும் அளவிற்கு அடையாளங்கள் சிதைந்து, பாதிப்பு கடுமையாக இருக்கிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்- தங்களின் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு- 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கனமழையிலும், மண்சரிவுகளிலும் சிக்கிக் கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். தேயிலைத் தோட்டக் கழகம் முறையாக பாராமரிக்கப்படாமல் இருப்பதால்,  அங்குள்ள தொழிலாளர்கள் ஏற்கனவே அவதிக்குள்ளாகி இருந்தார்கள். அவர்கள் இந்த கன மழையிலும் பாதிக்கப்பட்டு தங்கள் வீடுகளை இழந்து- அவர்களில் பெரும்பாலானோர் முகாம்களில் உள்ளனர். 

“மலையரசி “ என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் சாலை உட்கட்டமைப்பே அடியோடு நொறுங்கி - சிதறிப் போயிருக்கிறது என்பதை நான் நேரில் காண முடிந்தது. அதனால்தான் மழைச் சேதங்கள் மற்றும் பாதிப்புகளைப் பார்வையிட்ட பிறகு “நீலகிரி மாவட்டத்தை, பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினேன். ஆனால் மறு சீரமைப்பு பணிகளுக்கு 199 கோடி ரூபாய் என்று அரசு மதிப்பீடு செய்திருப்பது நிச்சயம் போதுமானதல்ல;

ஆகவே கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலை உட்கட்டமைப்பைச் சீரமைக்கவும், மண்சரிவுகளால் வீடுகளை இழந்து தவிப்போருக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளை முறையாகப் புதுப்பிக்காமல் - தற்போது முகாம்களில் இருப்போரைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து- மத்திய அரசிடமிருந்து உடனடியாக பேரிடர் நிதியைப் பெற்று, ‘ரிவிட்மென்ட்’ செய்வது உள்ளிட்ட பல்வேறு மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, நீலகிரி மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தோர்தம் குடும்பங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள பத்து லட்சம் ரூபாய் நிதி போதாது என்பதால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பதோடு, கன மழை மற்றும் மண் சரிவுகளில் இருந்து எதிர்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் நீலகிரி மாவட்டத்தில்  ஏற்படாமலிருக்க ஒரு “வல்லுநர் குழு” அமைத்து - உரிய சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி- அதை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும் என்றும்; பாதிக்கப்பட்டோர்க்கான அரசு நிவாரண உதவிகளை, அனைத்துக் கட்சிக் குழு அமைத்து அந்தக்குழுவினர் முன்னிலையில் வழங்கிட வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com